பிஎஃப் - இல் புதிய மாற்றம் ! வேலையிழக்கும் நேரத்தில் 75 சதவிகிதம் வரை பணம் எடுக்கலாம்
பிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதோடு தொழிலாளர்கள் எந்தெந்த தேவைகளுக்காக எவ்வளவு பணத்தை வெளியில் எடுக்கலாம் என்பது குறித்தும் பார்க்கலாம்
தொழிலாளர்கள் வேலையிழக்க நேரும் பட்சத்தில் அவர்கள் தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து 75 சதவிகிதம் வரை பணத்தை வெளியே எடுக்கலாம். வேலை இழந்த 30 நாட்களுக்கு பின் இத்தொகையை எடுக்க முடியும். 2 மாதம் வரை வேலை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள 25% தொகையையும் வெளியில் எடுக்க முடியும். இதுவரை 2 மாதத்திற்கு மேல் வேலை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஒரே தவணையாக பணத்தை வெளியில் எடுக்கும் வாய்ப்பு தரப்பட்டிருந்தது.
தொழிலாளர் தனது திருமணத்திற்காகவோ அல்லது மகன், மகள், சகோதரன், சகோதரியின் திருமணத்திற்காகவே பிஎஃப் சேமிப்பிலிருந்து பணம் எடுக்க முடியும். குறைந்தது 7 ஆண்டு பணியாற்றிய தொழிலாளரின் பிஎஃப் கணக்கில் அவரது பங்களிப்பில் 50% வரை பணத்தை எடுக்க முடியும். தனது கல்விக்காகவோ மகன் அல்லது மகளின் கல்விக்காகவோ தொழிலாளர் தமது பங்களிப்பிலிருந்து 50% பணத்தை எடுக்க முடியும். இது தவிர நிலம் வாங்கவோ வீடு கட்டவோ கூட பிஎஃப் கணக்கிலிருந்து குறிப்பிட்ட சதவிகிதம் வரை பணம் எடுக்க முடியும். இதற்கு ஆனால் நிலம் அல்லது வீடு தொழிலாளரின் பெயரிலோ அல்லது அவரது துணையின் பேரிலோ அல்லது இருவர் பெயரில் கூட்டாகவோ இருக்க வேண்டும். வீட்டுக்கடன் தவணை திரும்பக் கட்டுவதற்கும் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
தொழிலாளர் மற்றும் நிர்வாகத்ததரப்பில் மொத்த பங்களிப்பில் 90% வரை பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம், எனினும் இதற்கு தொடர்ந்து குறைந்தது 10 ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்கவேண்டும். வீட்டை புதுப்பிப்பதற்கும் பிஎஃப் கணக்கிலிருந்து தொகை எடுக்க முடியும். தனது அல்லது தனது குடும்பத்தினரில் அவசர மருத்துவ நிதி தேவைகளுக்கும் பணம் எடுக்கலாம், மருத்துவ சிகிச்சைக்கு பணம் எடுப்பதற்கு மட்டும் குறைந்த பட்ச பணிக்காலம் என்ற கட்டுப்பாடு இல்லை. இது தவிர ஓய்வு பெறுவதற்கு சற்றுமுன்பும் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம்.