தொடர் உயர்வில் விலைகள்... கணிசமாக உயரும் மாதாந்திர பட்ஜெட் செலவுகள்! முழு விவரம்

தொடர் உயர்வில் விலைகள்... கணிசமாக உயரும் மாதாந்திர பட்ஜெட் செலவுகள்! முழு விவரம்
தொடர் உயர்வில் விலைகள்... கணிசமாக உயரும் மாதாந்திர பட்ஜெட் செலவுகள்! முழு விவரம்

இந்தியாவில் சமையல் எண்ணெய், காபி தூள், டீ தூள், நூடுல்ஸ் என பல்வேறு வகை உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாமானியர்களின் மாதாந்திர பட்ஜெட் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 6 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல, மொத்தவிலை பணவீக்கமும் 13.11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கோதுமை, பாமாயில் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக அவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலையை 10 சதவிகிதம் வரை நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. உக்ரைன் -ரஷ்யா போர் காரணமாக விநியோக சங்கிலி தடைப்பட்டதே சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை கணிசமாக உயரக் காரணமாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா போன்ற தனியார் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் விலையை 10 முதல் 16 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளன. குறிப்பாக, நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், பால்பவுடர், காபிதூள் உள்ளிட்டவைகளின் விலை 4 சதவிகிதம் முதல் 16 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பான BRU காபி, Brooke Bond தேயிலைத்தூள் உள்ளிட்டவைகளின் விலையை 3 முதல் 14 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பணவீக்க உயர்வால் உள்ளீட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால் அடுத்து வரும் மாதங்களில் பார்லே நிறுவனம் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி மயன்க் ஷா தெரிவித்துள்ளார். அதேபோல, பணவீக்க உயர்வை கண்காணித்து வருவதாகவும், அதற்கேற்ப தங்கள் நிறுவன தயாரிப்புகளின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக டாபர் இந்தியா நிறுவனத்தின் நிதித்துறை அதிகாரி அனுஷ்க் ஜெயின் தெரிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய இடியாக இறங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com