கிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்?

கிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்?
கிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்?

செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விரைவில் கட்டண விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. கட்டணங்களை உயர்த்துவதற்கான காரணம் என்ன?
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்னும் சில வாரங்களில் தனது கட்டண விகிதங்களை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் நுகர்வோரை பெரிதும் பாதிக்காத வகையில் கட்டண உயர்வு இருக்கும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. முன்னதாக மற்ற இரு முன்னணி செல்போன் சேவை நிறுவனங்களான ஏர்டெல்லும் வோடாஃபோன் ஐடியாவும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளன. இந்திய செல்போன் நிறுவனங்கள் இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் இந்த அறிவிப்புகள் வரிசையாக வெளியாகியுள்ளன. 

அண்மையில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி மத்திய அரசுக்கு 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. அதே நேரம் செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் வோடாஃபோன் 54 ஆயிரம் கோடி ரூபாயும் ஏர்டெல் 23 ஆயிரம் கோடி ரூபாயும் நஷ்டத்தை பதிவு செய்துள்ளன. அரசுக்கு பணம் செலுத்துவதுடன் நஷ்டத்தையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஏர்டெல்லும் வோடாஃபோனும் கட்டண உயர்வை அறிவித்துள்ளன. 

இது தவிர அடுத்து 5ஜி சேவைக்கும் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து சந்தை சூழலுக்கு ஏற்ப ஜியோவும் கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இலவச சேவை என அதிரடியாக ரிலையன்ஸ் ஜியோ செல்போன் சேவை சந்தையில் நுழைந்தது. 

இதனால் பிற நிறுவனங்களும் தங்கள் கட்டண விகிதங்களை கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டி வந்தது. இந்நிலையில் தற்போது சூழல் முற்றிலும் மாறிவிட்ட நிலையில் கட்டண உயர்வு மீண்டும் தொடங்கவுள்ளது. இனி கட்டண உயர்வுகள் தொடர்கதையாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com