முதல் இடத்தில் ஆப்பிள்... 2 ட்ரில்லியன் டாலர் கிளப்பில் மைக்ரோசாப்ட்!
இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பில்லியன் டாலர் நிலையை அடைவதற்கு தயாராகி வரும் சூழலில், அமெரிக்காவில் ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை அடைய பல நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன. சில நாட்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் 2 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது.
முதல் இடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது. ஆப்பிளுக்கு பிறகு மிகப்பெரிய நிறுவனமாக மைக்ரோசாப்ட் இருக்கிறது. மைக்ரோசாப்டில் 2014-ம் ஆண்டு சத்யா நாதெள்ள தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு நிறுவனத்தின் வளர்ச்சி உயர்வாகவே இருந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இரு ஆண்டுகளுக்கு முன்புதான் ஒரு ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது. இரண்டே ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை மைக்ரோசாப்ட் தொட்டிருக்கிறது.
2020-ம் ஆண்டு மட்டும் மைக்ரோசாப்ட் பங்கு 64 சதவீத ஏற்றம் அடைந்திருக்கிறது. நிறுவனத்தின் க்ளவுட் பிரிவு பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. மேலும், இந்தப் பிரிவின் வளர்ச்சி இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது. மொத்த வருமானத்தில் க்ளவுட் பிரிவின் வருமானம் 33.8 சதவீதமாக இருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து சில நிறுவனங்கள் 2 ட்ரில்லியன் டாலர் இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட்க்கு அடுத்த இடத்தில் சவுதி அரம்கோ நிறுவனம் உள்ளது. ஆனால் இந்த நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 2 ட்ரில்லியன் டாலர் என்னும் சந்தை மதிப்பை தொட்டது. ஆனால், அதன் மதிப்பு தற்போது 1.8 ட்ரில்லியன் டாலராக இருக்கிறது. இதற்கு அடுத்தடுத்த இடத்தில் அமேசான் (1.76 ட்ரில்லியன் டாலர்) மற்றும் ஆல்பபெட் (1.6 ட்ரில்லியன் டாலர்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
ஃபேஸ்புக் விரைவில் ஒரு ட்ரில்லியன் டாலரை அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.