மக்களே மார்க்கெட்டிங் ஏஜெண்ட் - புதிய அணுகுமுறை
செத் கோடின் என்பவர் ஒரு பெரிய மார்கெட்டர், அவருடைய நேர்காணலை சமீபத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். அவர் ஒரு முக்கியமான விஷயம் சொன்னார்.
மார்கெட்டிங் என்பது முன்ன மாதிரி இல்ல, முரட்டுத்தனமாக மாறி இருக்கிறது என்றார். உதாரணமாக நாம வழக்கமா என்ன செய்வோம்? என்கிட்ட ஒரு பொருள் இருக்கு, வாங்கிக்கோ என்றே விளம்பரப்படுத்துவோம். இதையே தான் எல்லோரும் செய்கிறார்கள். மக்கள் யாருடைய பொருளை வாங்குவார்கள்? அவங்களுக்கு அந்த பொருள் பத்தி ஒரு அனுபவம் இருக்க வேண்டும். அப்போது அதை வாங்குவார்கள். நம்முடைய பிரச்சினை பைரசி (piracy) இல்லை. பைரசி(piracy)யால் நன்மை தான் ஏற்பட்டிருக்கு, நம் தரம் பற்றி இன்னொருவருக்குத் தெரியப்படுத்துகிறோம். அவர் அடுத்தமுறை நம்மகிட்ட காசு கொடுத்து வாங்குவார்.
உதாரணமாக இணையத்தில் அதிக அளவில் டவுன்லோட் செய்யப்பட்ட சீரியல் கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of thrones). இதனால் அவர்கள் பெரிய அளவில் நஷ்டமாகிவிடவில்லை. ஒவ்வொரு சீசனுக்கும் வருமானம் அதிகமாகிக்கொண்டே தான் போயிருக்கிறது. ரெண்டு சீசன் இலவசமாக பார்த்தவன், மூன்றாவது சீசனை அர்ஜண்டாக பார்க்க வேண்டிய நிலை வந்தால் காசு கொடுத்து பார்க்கவும் தயங்க மாட்டான். இது ஒரு வகையில் உண்மை தான். நான் நோலனுடைய படங்களை டவுன்லோட் செய்து தான் பார்த்தேன். சமீபத்தில் டன்கிர்க் (Dunkirk) வந்தபோது, எவ்வளவு செலவானாலும் பரவால்ல, தியேட்டர் தான் போறோம் என்று தியேட்டர் போனேன். காரணம் நோலன் (Nolan) மீது உள்ள நம்பிக்கை.
இந்த உதாரணத்தை நீங்கள் தமிழ் சினிமாவில் பொருத்தி பார்த்து என்னிடம் சண்டைக்கு வர வேண்டாம். மார்கெட் சூழலைப் பொருத்து இது மாறுபடும் (அது ஒரு பெரிய விவாதம்). சைண்டிஃபிக் அட்வெர்டைசிங் (Scientific advertising) என்ற புத்தகத்திலும் இதையே தான் வேறு ஒரு ஆங்கிலில் (Angle) படித்தேன். அமெரிக்காவில் ஒரு பிரபலமான மார்க்கெட்டிங் முறை உள்ளதாம். டேய் உனக்கு பொருள் புடிச்சிருக்கா, எடுத்துக்கோ. யூஸ் பண்ணி பாரு. 15 நாள் கழிச்சு புடிக்கலன்னா திருப்பி குடுத்துரு (Returning policy).
இந்த வகை மார்கெட்டிங்கில் பத்துக்கு 8 பொருள் வித்துருதாம். சேத் காடின் ஒரு விஷயம் கேட்டார், பிரமித்து விட்டேன். உங்ககிட்ட என்னைக்காவது வந்து பேஸ்புக்காரனோ, ட்விட்டர்காரனோ வந்து தம்பி என்கிட்ட அக்கவுண்ட் ஓபன் பண்ணிக்கோன்னு சொன்னானா? ஆனா நீ ஓப்பன் பண்ணயே எப்டி? உன் நண்பர்கள் சொல்லி? எனவே மார்கெட்டிங் என்பது மக்களின் தாக்கம் (Influencing people). பிறகு மக்களே நமக்கான மார்கெட்டிங்கை செய்வார்களாம். அது சரி!
(கட்டுரையாளர் - ஸ்வரா வைத்தி)