Trump favours pakistan ahead of India
TRUMPpt

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்... மீண்டும் மீண்டும் புண்படுத்தும் டிரம்ப்..!

நேற்று இந்தியாவுக்கு 25% வரி விதித்து அதிர்ச்சி கிளப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று மீண்டும் வெந்து கொண்டிருக்கும் புண்ணில் வேலைப் பாய்ச்சி இருக்கிறார்.
Published on

பாகிஸ்தானுடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக அறிவித்திருக்கிறார் டிரம்ப். அதோடு நில்லாமல் பாகிஸ்தானுடன் இணைந்து பெரிய அளவிலான எண்ணெய் ஒப்பந்தங்களில் ஈடுபட இருப்பதாகவும், அதற்கு ஏற்ற நிறுவனங்களை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.  வரும் காலங்களில் பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலைகூட வரலாம் என்றும் தன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிகச்சிறந்த நண்பர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. அதை டொனால்டு டிரம்பே பலமுறை கூறியிருக்கிறார். ஆனால், நேற்று தடாலடியாக 25% வரி என்று அறிவித்ததோடு நில்லாமல், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்காக அபராத வரியும் விதிக்கப்படும் என குண்டைப் போட்டிருக்கிறார். இந்த 25% வரி விதிப்பால் டெக்ஸ்டைல் உள்ளிட்ட துறைகள் பெரிய அளவிலான நஷ்டத்தை சந்திக்க இருக்கின்றன.

இந்தோனேஷியாவுக்கு ஏப்ரல் மாதம் 32 சதவித வரி என பீதியைக் கிளப்பினார் டிரம்ப். ஆனால், தற்போது அதை பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 19% ஆக குறைத்துவிட்டார். ஜப்பானுக்கு 24% என அப்போது சொன்னவர், இப்போது 15% ஆக குறைத்துவிட்டார். இந்திய அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகவே இந்தியாவுக்கும் அமெரிக்காவும் பறந்து கொண்டிருந்தனர். எப்படியும் இந்தியாவுக்கு சிறப்பான டீலை முடித்துக்கொண்டு வருவார்கள் என பலரும் நம்பியிருந்தனர்.  இந்தியாவுக்கு ஏப்ரல் மாதம் 26% என டிரம்ப் சொல்லியிருந்தார். அன்று பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. ஆனால், இன்று 25 சதவிகத்துடன் கூடுதலாக அபராதம் வேறு விதிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். 

ஆப்பரேசன் சிந்தூர் ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை தான் சொல்லித்தான் இந்தியா போரை நிறுத்தியதாக 30 முறை சொல்லிவிட்டார் டிரம்ப். பாகிஸ்தானுடன் தொடர்ந்து நட்பும் பாராட்டிவந்தார் டிரம்ப்.  ராகுல் காந்தி உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் இதுகுறித்து காட்டமாக கேள்வி எழுப்பிய போதும், அதற்கு மோடி தெளிவாக இதுவரை பதில் சொல்லியதே இல்லை. இப்படி டிரம்ப் மனம் கோணாமல் பார்த்துக்கொண்டதற்கு டிரம்ப் செய்யும் நன்றிக்கடன் இதுதானா என கேள்வி எழுப்புகிறார்கள் நெட்டிசன்ஸ். 

நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் டிரம்ப், பாகிஸ்தானுக்கு மட்டும் சலுகைகளை அள்ளி வீசுவதாகவும், அதோடு பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் என நக்கல் வேறு அடித்திருக்கிறார் என பலர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி அமைதியாக இருப்பதைப் பார்த்தால் இந்தியா பெரிய திட்டத்தை கையில் எடுக்கும் போல தெரிகிறது. காத்திருப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com