90 நாள் நிறுத்திவைப்பு... 10% தள்ளுபடி... 10% உயரும் பங்குகள்... இனி பங்குச்சந்தைக்கு பொற்காலமா..?
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பிற்கு 90 நாட்கள் விலக்கு என அறிவித்ததும், அமெரிக்க பங்குகள் சடசடவென 10% உச்சம் தொட்டன. 2008ம் ஆண்டிற்குப் பிறகு இப்படி சில மணி நேரங்களில் 10% ஏற்ற இறக்கம் ஏற்படுவது இதுவே முதல் முறை. பிட்காயின் கூட 8% உயர்ந்து 81,000 அமெரிக்க டாலர்களைக் கடந்துவிட்டது.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இந்திய பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை. ஆனாலும், இன்று அதிகாலையே GIFT NIFTY 4% உச்சம் தொட்டது. ஆக, நாளை காலை இந்திய பங்குச்சந்தைகள் திறக்கும்போது பல பங்குகள் நல்ல லாபத்துடன் உயர வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 7ம் தேதி டிஃபன், காபி, பஜ்ஜி அளவுக்கு சிறிதளவு வாங்காமல் பெரும் அளவில் வாங்கி இருந்தவர்களுக்கு, நிச்சயம் குறுகிய காலத்தில் ஒரு ஜாக்பாட் அடிக்க இருக்கிறது.
அதே சமயம், டிரம்ப் வெளியிட்ட செய்திக்கு பின்னால் நடந்த அரசியலை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஒவ்வொரு சந்தையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அதனால் தான் திருப்பரங்குற்றத்தில் டிரம்ப் எடுக்கும் முடிவுகள் திருச்செந்தூரில் எதிரொலிக்கின்றன.
பரஸ்பர வரி விதிப்பு குறித்து டிரம்ப் சில வாரங்களாகவே எச்சரித்து வந்தார். இந்தியப் பிரதமர் மோடி தன் நெருங்கிய நண்பர் என்று கூறிய போதிலும், இந்தியா அதிக அளவில் வரி விதிக்கிறது என்று இந்தியாவை பலமுறை குறிவைத்து பேசினார். அதனால், வரி விதிப்பில் இந்தியாவுக்கு டிரம்ப் எந்த சலுகையும் காட்ட மாட்டார் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் தான் இந்தியாவுக்கு 26% வரி விதிப்பு என அறிவித்தார் டிரம்ப். ஏப்ரல் 7ம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் 5% வீழ்ச்சியில் தொடங்கின. பணம் இருப்பவர்கள், நீண்ட கால முதலீட்டாளர்கள் குறைவான விலைக்கு பங்குகளை வாங்கினார்கள். அன்று மட்டும் இந்தியாவின் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 27,000 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கினார்கள். அவர்கள் அன்று முதலீடு செய்யாமல் இருந்திருந்தால், பங்குகள் மேலும் வீழ்ச்சி அடைந்திருக்கும்.
ஏப்ரல் 9ம் தேதி வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் நாள் என்பதால் இன்னும் பங்குகள் வீழும் என்றே பலரும் கருதினர். ஆனால் ஏப்ரல் 7ம் தேதி இரவு, அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பில் இருந்து 90 நாள்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என செய்தி வெளியானது. அதனால் அமெரிக்க பங்குச்சந்தைகள் வேகமாக உயர்ந்தன. ஒரு மணி நேரத்திலேயே அந்தச் செய்தி போலியானது என மறுப்பு வெளியானது. உயர்ந்த பங்குகள் அதே வேகத்தில் கீழ்நோக்கிச் சென்றன. ஆனால் நேற்று இரவு உண்மையாகவே 90 நாள்களுக்கு விலக்கு என அறிவித்திருக்கிறார் டிரம்ப். இதையொட்டி, டிரம்ப் முதலில் செய்தியை அறிவித்து பின்னர் மறுத்து, இப்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதால் சந்தேகங்கள் எழுகின்றன.
நேற்று இரவு டிரம்ப் 90 நாட்கள் விலக்கு என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு, அவருடைய சமூக வலைதளமான Truth Social-ல் "THIS IS A GREAT TIME TO BUY" (இது வாங்குவதற்கு சிறந்த நேரம்) என பதிவிட்டார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாரேனும் முதலீடு செய்திருந்தால், அவர்களுக்கும் நேற்று பெரும் லாபம் கிடைத்திருக்கும்.
டிரம்ப் ஒரு வணிகர் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு டிரம்ப் தான் அதிபர் என்பதால், இப்படியான திடீர் நடவடிக்கைகளை பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.