கிலோவுக்கு ரூ.5,000 விலை குறைவு.. வெள்ளி இறக்குமதியில் சாதனை படைத்த இந்தியா!
2025ஆம் ஆண்டை மட்டும் எடுத்துக் கொண்டால் தங்கம் விலை 75 சதவீதம் உயர்ந்தது என்றால், வெள்ளியோ 130 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆனால், தற்போது, 272 ரூபாயை எட்டியிருக்கிறது. இவ்வாறு, வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தாலும், கடந்த சில வாரங்களாக வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், இன்று சென்னையில், வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்திருக்கிறது. அதன்படி, வெள்ளி விலை கிலோவுக்கு 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று குறைந்திருக்கிறது. அதன்படி, 1 சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி இறக்குமதியில் இந்தியா சாதனை!
2025-ஆம் ஆண்டில் இந்தியா 82 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளியை இறக்குமதி செய்து உலக சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 44% வளர்ச்சியாகும். பசுமை ஆற்றல் திட்டங்களான சோலார் பேனல்கள் மற்றும் மின்சார வாகன பேட்டரி தயாரிப்பில் வெள்ளியின் தேவை அதிகரித்ததே இதற்குக் காரணம்.
இந்நிலையில், தேவை அதிகரிப்பால் வெள்ளியின் விலை கிலோ இரண்டரை லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தாதுக்களைச் சுத்திகரிப்பதில் சீனா 90 விழுக்காடு ஆதிக்கம் செலுத்துவது இந்தியாவிற்குச் சவாலாக இருந்தாலும், முதலீட்டு ரீதியாக வெள்ளி தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

