5 ஆண்டுகளுக்கு பின் வந்த அறிவிப்பு.. கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி!
வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு குறைத்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் வாங்கியுள்ள வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டியும் குறையும் ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை கூட்டம் அதன் புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் மும்பையில் நடைபெற்றது.
இதன் பின் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி வீதமான ரெப்போ 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆக்கப்படுவதாக தெரிவித்தார். பணவீக்கம் விகிதம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தொழில் வளர்ச்சியை முடுக்கிவிடும் நோக்கில் இம்முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
இம்முடிவால் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வருமான வரி விலக்கு வரம்பை 12 லட்சம் ரூபாயாக உயர்த்திய நிலையில் தற்போது வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது மூலம் பணப்புழக்கம் அதிகரித்து நுகர்வுகளும் பெருகி பொருளாதார வளர்ச்சி உயரும் என அரசு கருதுகிறது.
ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைப்பு பலனை வங்கிகள் பொது மக்களுக்கு வழங்குமா என்பது சந்தேகமே என்றும் மாறாக விலைவாசிதான் உயரும் என்றும் பொருளாதார நிபுணரான ஜோதி சிவஞானம் தெரிவித்துள்ளார்.