பங்குச்சந்தை இறக்கத்தில் முதலீட்டாளர்கள் செய்யக்கூடாத தவறுகள்!

"உங்கள் முட்டைகள் அனைத்தையும் ஒரே கூடையில் போடாதீர்கள்" என்ற பழமொழிக்கு ஏற்ப, உங்கள் முதலீடு அனைத்தையும் ஒரே இடத்தில் செய்யாதீர்கள். பலதரப்பட்ட முதலீடுகளின் மூலம் உங்கள் ரிஸ்க் குறைகிறது.
Share Market
Share MarketImage by Peggy und Marco Lachmann-Anke from Pixabay

'பங்குச்சந்தை வீழ்ச்சி', 'பங்குச்சந்தை இத்தனை சதவிகிதம் இறக்கம் கண்டது. முதலீட்டாளர்கள் கவலை' என்றெல்லாம் அவ்வப்போது செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் பங்குச்சந்தை என்பது ஒரு ரோலர் கோஸ்டரைப் போல! ஏற்றமும் இறக்கமும் இதில் எப்போதும் உண்டு. ஏறுமுகத்தை மட்டுமே பார்த்தவர்கள் எனப் பங்குச்சந்தையில் எவருமே கிடையாது. ஒரு சராசரி முதலீட்டாளர் மத்தியில் எப்போதும் ஏற்படும் பயம், "பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தால் நாம் என்ன செய்வது?" என்பதாகும். இக்கேள்விக்கான எளிய தீர்வுகளை இங்கே காணலாம்.

முதலீட்டில் நீங்கள் எப்படி?

முதலீட்டில் நீங்கள் குறுகிய கால முதலீட்டாளரா அல்லது நீண்ட கால முதலீட்டாளரா என்பதில் முதலில் தெளிவாக இருங்கள். ஒப்பீட்டளவில் பங்குச்சந்தை இறக்கம் என்பது குறுகிய கால முதலீட்டாளருக்கே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கங்களைப் பற்றிக் கவலைப்படாமல், நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து முதலீடு செய்துவருபவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஒரு நீண்ட கால முதலீட்டாளர் பங்குச் சந்தை நிலைமையைப் பற்றி கவலைப்படுவது குறைவு. இதற்கான காரணம் எளிமையானது, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம்; இன்று சந்தை மண்டியிட்டால், வரும் நாட்களில், மீண்டும் விண்ணில் ஏறும்.

காகித நஷ்டத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம்!

ஓர் உதாரணத்தை இங்கு பார்க்கலாம். ஒரு முதலீட்டாளர் பங்குச்சந்தையில் ரூ.10,000 முதலீடு செய்திருக்கிறார். அதன்பின் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்து அவர் முதலீட்டின் மதிப்பு ரூ.6,000 அளவுக்குக் குறைந்திருக்கிறது என வைத்துக்கொள்வோம். இப்போது அவர் முதலீட்டின் மதிப்பு 40% அளவுக்குக் குறைந்திருக்கிறது. இப்போது அவர் பங்குகளை விற்றால் மட்டுமே அவருக்கு நஷ்டம். ஆனால், அவர் பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் காணும் என்ற நம்பிக்கையில் சிறிது காலம் காத்திருந்து, பங்குச்சந்தை இயல்புநிலைக்குத் திரும்பினாலே அவர் இந்த நஷ்டத்தை எளிதாகத் தவிர்க்கமுடியும்.

நிதானமாகச் செயல்பட வேண்டும்!

"உங்களால் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், உங்களால் உங்கள் பணத்தைக் கட்டுப்படுத்த முடியாது" - என்கிறார் வாரன் பபெட். பங்குச்சந்தை இறங்கும்போது சராசரி முதலீட்டாளர்களுக்கு தங்களின் முதலீட்டில் ஏற்படும் பாதிப்புகள் கலக்கத்தை ஏற்படுத்தும் தான். ஆனால், இந்தமாதிரியான அசாதாரண சூழ்நிலையில் நிதானமாகச் செயல்பட வேண்டியது அவசியம். கொரோனா காலகட்டத்தில் 12,000-க்கும் மேல் இருந்த நிஃப்டி-50 புள்ளிகள் சுமார் 8,000 அளவுக்குச் சரிந்தன. பீதியில் முதலீட்டாளர்கள் பலரும் தங்கள் முதலீடுகளை விற்று பங்குச்சந்தையைவிட்டு வெளியேறினர். ஆனால், இப்போது நிஃப்டி-50 வரலாற்று உச்சமான 21,894.55 புள்ளிகளையெல்லாம் தொட்டுவிட்டு, 21,352 என்ற நிலையில் இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் நிதானமாகச் செயல்பட்ட புத்திசாலி முதலீட்டாளர்கள் தற்போது பன்மடங்கு லாபத்துடன் உள்ளார்கள்.

இறக்கம் என்பது பெரும் வாய்ப்பு!

"மற்றவர்கள் பேராசை கொள்ளும்போது பயப்படுங்கள், மற்றவர்கள் பயப்படும்போது பேராசையுடன் இருங்கள்" - இதுவும் வாரன் பபெட் பொன்மொழி தான். பங்குச் சந்தை வீழ்ச்சி என்பது அனைத்துப் பங்குகளின் விலைகளும் குறைந்துள்ளதைக் குறிக்கிறது, மேலும் பங்குகளைக் குறைந்த விலைக்கு வாங்குவதற்கு இதுவே சரியான வாய்ப்பாகும். இறக்கத்தில் சிறிய அளவில் செலவழிப்பதன் மூலம், எதிர்காலத்தில் அதிக லாபத்தைப் பதிவுசெய்ய முடியும். உதாரணத்திற்கு பிப்ரவரி, 2020-ம் ஆண்டில் சுமார் ரூ.3,000-ற்கு மேல் இருந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனப் பங்கின் விலையானது, அதே வருடம் மார்ச் மாதத்தில் சுமார் ரூ.2,000 அளவுக்குச் சரிந்தது. இது 30 சதவிகிதத்திற்கும் அதிகமான வீழ்ச்சி. இப்போது அதே பங்கின் விலை ரூ.7,597.50 ஆகும். பிப்ரவரியில் பங்கை வாங்கியவரை விட, மார்ச் மாதத்தில் இதே பங்கை வாங்கியவரின் லாபம் அதிகம்.

கண்மூடித்தனமாக செயல்படாதீர்கள்!

உங்கள் முதலீடு லாபகரமானதாக இருக்க பங்குச்சந்தையின் கட்டைவிரல் விதி (Thumb rule), பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்பது ஆகும். பங்குச்சந்தையின் இறக்கம் என்பது பங்குகளை வாங்க சரியான வாய்ப்புதான். ஆனால், அதற்காக கண்மூடித்தனமாகப் பங்குகளை வாங்கலாம் என்று அர்த்தமல்ல. ஒரு பங்குச் சந்தை முதலீட்டாளர் என்பவர் பொறுமையாக இருப்பதோடு, நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் செயல்பாடு பற்றி ஓரளவு ஆராய்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும். கடன் குறைவான, விற்பனை மற்றும் லாப வளர்ச்சி கொண்ட நல்ல நிறுவனத்தைத் தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டியது அடிப்படை. நம் கடின உழைப்பில் சேமித்த பணத்தைச் சரியான நிறுவனத்தில் முதலீடு செய்வதுதானே சரி! எனவே நாம் முதலீடு செய்யும் நிறுவனத்தைப் பற்றிய அடிப்படை விவரங்களைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

பங்குச்சந்தை முதலீட்டில் செய்யக்கூடாத தவறுகள்:

  • கடன் வாங்கி முதலீடு செய்யவே கூடாது.

  • தனிநபர் நிதி நிர்வாகத்தைப் பொறுத்தவரை, அவசர கால நிதி அவசியம். அதற்கு அடுத்தபடியே பங்குச்சந்தை முதலீட்டில் ஈடுபட வேண்டும்.

  • "உங்கள் முட்டைகள் அனைத்தையும் ஒரே கூடையில் போடாதீர்கள்" என்ற பழமொழிக்கு ஏற்ப, உங்கள் முதலீடு அனைத்தையும் ஒரே இடத்தில் செய்யாதீர்கள். பலதரப்பட்ட முதலீடுகளின் மூலம் உங்கள் ரிஸ்க் குறைகிறது.

  • பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பங்குச்சந்தைக்கும் பொருந்தும். பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் கண்டு பதற்றமடைபவர்களே அதிகம் நஷ்டத்தையும் சம்பாதிக்கிறார்கள்.

  • அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று யாரோ சொன்னதைக்கேட்டு முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிறுவனத்தைப் பற்றி நாமும் ஆய்வு செய்வது அவசியம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com