விற்றுத்தள்ளும் FIIs... விடாமல் வாங்கும் DIIs... என்று முடியும் இந்த போட்டி?
பங்குச்சந்தையில் கடந்த ஒரு வாரமாக எல்லாரும் கவலையோடு பார்ப்பது இன்று FIIs விற்ற அளவு என்ன என்பதுதான். சென்ற செப்டம்பர் மாத இறுதியில் ஆரம்பித்த இந்த விற்கும் நிகழ்வு இன்றுவரை நிற்கவில்லை. தொடர்ந்து 18 நாட்களாக தினமும் இந்திய பங்குகளை விற்றுக்கொண்டே இருக்கிறார்கள். அக்டோபர் மாதம் 23ம் தேதி வரை ரூ.1.03 லட்சம் கோடி ($12 பில்லியன்) மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
FIIs விற்க காரணங்கள் என்ன :
இந்திய பங்குச்சந்தை மற்ற வளரும் நாடுகளின் பங்குச்சந்தையை விட அதிக மதிப்பில் வர்த்தகம் ஆவது முக்கியமான முதல் காரணம் .
சீனா கடந்த மாதம் ஆரம்பித்து தொடர்ந்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதால் முதலீட்டாளர்கள் அங்கு செல்கின்றனர். கிட்டத்தட்ட $25 பில்லியன் டாலர் அளவுக்கு சீனா மற்றும் ஹாங்காங் பங்குசந்தையில் முதலீடு செய்துள்ளனர் .
சீனா பங்குச்சந்தையின் P/E அளவு 13 அதே சமயம் இந்தியாவின் Nifty P/E அளவு 22.8.
இந்தியாவின் பொருளாதார மந்தநிலை & நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் கவலையளிக்கும் வகையில் உள்ளதால் அதிக மதிப்பில் உள்ள பங்குகளை தொடர்ந்து விற்கின்றனர்.
விற்பது நிற்குமா ?
FII களிடம் கிட்டத்தட்ட $800 பில்லியன் அளவுக்கு இந்திய பங்குகள் உள்ளது. அவர்கள் இந்தியாவில் இந்த அக்டோபர் மாதம் விற்றுள்ளது $12 பில்லியன் மதிப்புள்ள பங்குகள் மட்டுமே. அதாவது கையில் உள்ள பங்குகளில் 1.4% மட்டுமே விற்றுள்ளனர். இதற்க்கு முன்னர் ரஷ்யா -உக்ரைன் போர் காலகட்டத்தில் $35 பில்லியன் அளவு பங்குகளை 8 மாதங்களாக விற்றனர். இந்திய மதிப்பில் 2.74 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை 2022ம் ஆண்டு விற்றனர்.
கொரோனா பெருந்தொற்றின் போது ஒரு மாதத்தில் $10 பில்லியன் அளவுள்ள பங்குகளை விற்றனர் . அதற்க்கு பிறகு ஒரு மாதத்தில் $10 பில்லியன் அளவுக்கு இந்த அக்டோபர் மாதத்தில் தான் விற்றுள்ளனர். தொடர்ந்து உலகம் முழுவதும் நடந்து வரும் போர் சூழல் , அமெரிக்க அதிபர் தேர்தல் , சீனா பொருளாதார ஏற்றம் ஆகியவை FII விற்பதை நிர்மாணிக்கும் சக்திகளாக இருக்கும் .
வாங்கி தள்ளும் DIIs :
கிட்டத்தட்ட FII விற்ற அளவிற்கு இந்திய பெரு முதலீட்டாளர்கள் (DIIs) பங்குகளை வாங்கி உள்ளனர். 3 காரணிகள் இந்திய பங்குச்சந்தையை கீழ விழாமல் தாங்கி பிடிக்கும் என கருதப்படுகிறது, அவையாவன :
1. மாதந்தோறும் தோராயமாக ரூ. 21000 கோடி அளவுக்கு SIP பணம் பரஸ்பர நிதிநிறுவனங்களுக்கு (Mutual funds)வருகிறது.
2. செப்டம்பர் மாத தரவுகளின் படி Mutual funds இடம் கைவசம் 1.8 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் ரொக்கமாக உள்ளது.
3. EPFO எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதியில் 1.5 ரூபாய் மதிப்புள்ள பணம் உள்ளது.
மேலும் சில மாதங்கள் இந்த விற்பனை தொடர்ந்தால் நிலைமை மோசமாக கூடும் என பங்குசந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுபோக கடந்த ஆறு மாதங்களில் மட்டும், நிறுவனங்கள் சந்தைகளில் $30 பில்லியனை திரட்டியுள்ளன, அதில் $15 பில்லியன் புதிய திறன்களை உருவாக்குவதற்காக. ஆனால் $15 பில்லியன் உண்மையில் நிறுவன உரிமையாளர் (Promoter) மற்றும் தனியார் பங்கு (Private equity) விற்று பணத்தை எடுத்து உள்ளனர்.
FII-க்கள் விற்கும் துறைகள் எவை:
வங்கிகள் , எண்ணெய் & எரிவாயு, வாகன விற்பனை & FMCG துறைகளில் அதிகமாக பங்குகளை விற்று வருகின்றனர். அதே சமயம் ஆச்சர்யம் ஊட்டும் வகையில் Chemicals & உலோகத்துறை பங்குகளை சிறிதளவு வாங்கியும் உள்ளனர்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் :
எஃப்ஐஐ வெளியேற்றம் கவலைகளை எழுப்பினாலும், SIPகள் மூலம் DIIகள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் வலுவான ஆதரவு சந்தையை சீராக வைத்துள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ச்சித் திறனில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் குறுகிய கால சந்தை நகர்வுகளுக்கு எதிர்வினையாற்றுவதை விட முதலீட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.