டாலருக்கு ரூ.90 என சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு., என்ன மாதிரியான விளைவுகள் வரும்?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 90 ரூபாய் என வரலாறு காணாத அளவில் தற்போது சரிந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 22 ரூபாய் என்ற அளவில் இருந்தது. 2000 ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்த மதிப்பு 45 ரூபாயாக சரிந்தது. அதன் பின்னர், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், 2005 ஆம் ஆண்டில் 43 ரூபாயாகவும், 2010 ஆம் ஆண்டில் 46 ரூபாயாகவும் ஆகவும் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. 2013 ஆம் ஆண்டில் இது 63 ரூபாயாக சரிந்தது. 2015 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சியில், 65 ரூபாயாகவும், 2020 ஆம் ஆண்டில் 74 ரூபாயாகவும் மேலும் சரிந்தது. இதன் உச்சமாக, தற்போது 90 ரூபாயை எட்டியுள்ளது.
அந்நிய முதலீடுகளின் வெளியேற்றம், உலக முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து தொடர்ந்து பணத்தைத் திரும்பப் பெறுவது ஆகியவை இதற்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதேபோல், அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம், வரி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும், இதன் காரணிகளாக சொல்லப்படுகிறது. இந்த நிலைத்தன்மையின்மையைக் கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி, சந்தையில் தலையிட்டு நிலைப்படுத்த முயற்சிகள் எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதன் காரணமாக, கச்சா எண்ணெய், மின்னணுப் பொருட்கள் போன்ற இறக்குமதிப் பொருட்களின் விலை உயரும். இதனால், பெட்ரோல் முதல் அன்றாடப் பொருட்கள் வரை எல்லாவற்றின் விலையும் கூடும். நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும். தொடர்ந்து, வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி மற்றும் பயணச் செலவுகள் அதிகமாகும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

