2 வாரத்தில் 51 ஆயிரம் உயர்வு., வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை.!
வெள்ளி விலை வரலாறு காணாத மிகப் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 56 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது 3 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. அதாவது வெறும் இரண்டே வாரங்களில் வெள்ளி கிலோவுக்கு 51 ஆயிரம் ரூபாயும் கிராமுக்கு 51 ரூபாயும் ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி இடிஎஃப்களிலும் முதலீடு மிகப் பெரும் அளவில் உயர்ந்து வருகிறது.
சர்வதேச அளவில் காணப்படும் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் உயர்வைக் கண்டு வருகிறது. வெள்ளியைப் பொறுத்தவரையில், அது பெரும்பான்மையாக சோலார் பேனல், மின்வாகனம் தொழில்துறை தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது இவற்றின் தயாரிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெள்ளிக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சம் தொட்டு வருகிறது. அதிக விலை கொடுத்து தங்கத்தில் முதலீடு செய்வதற்கு மாற்றாக குறைந்த விலையில் வெள்ளியில் முதலீடு செய்யும் போக்கு தற்போது அதிகரித்து இருப்பதும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

