90 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை.. ஒரேநாளில் 2 முறை விலையேற்றம்!
சென்னையில் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 90 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால், சாமானிய மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். விலை குறைந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்ற பலரது எண்ணம் கனவாகவே போகும் அளவுக்கு தங்கம் விலை நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நடப்பாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியைத் தர தவறுவதில்லை.
அமெரிக்காவின் வரிவிதிப்புகள், அந்நாட்டின் பெடரல் வங்கி கடன் வட்டி விகிதத்தைக் குறைத்தது மட்டுமல்லாமல், டாலர் மதிப்பு சரிவடைவதும் தங்கம் விலை அதிகரிக்க முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இதுதவிர, சர்வதேச அளவில் நிகழும் போர்ப் பதற்றங்களும், முதலீட்டாளர்களின் கவனத்தை தங்கத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது.
பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தில் முதலீடுகளைக் குவிப்பதும், அதன் விலை உயர காரணமாக அமைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 90 ரூபாய் உயர்ந்து 10 ஆயிரத்து 890 ரூபாயாக அதிகரித்துள்ளது. சவரனுக்கு 750 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் 87 ஆயிரத்து 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை சுமார், இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 1-ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் 77 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்து வந்த நாட்களிலும் ஏற்றத்துடனேயே காணப்பட்டது. செப்டம்பர் 6ஆம் தேதி ஒரு சவரன் 80 ஆயிரம் ரூபாய் என்ற மைல்கல்லை தாண்டிய நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி 81 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், செப்டம்பர் 25ஆம் தேதி 84 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. கடந்த ஆண்டை பொறுத்தவரை அக்டோபர் 1ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ஏழாயிரத்து 50 ரூபாய்க்கும், ஒரு சரவன் 56 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையானது. அதாவது, கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியை ஒப்பிடும்போது இந்தாண்டு அதே நாள், தங்கத்தின் விலை சவரனுக்கு 30 ஆயிரத்து 720 ரூபாய் உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை உயரவே வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.