அடுத்தடுத்து பண்டிகை காலம்! சுப நேரத்தில் பங்குகளை வாங்கினால் நல்லதா? Muhurat Trading என்றால் என்ன?
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
இந்தியப் பங்குச்சந்தைகளான மும்பை பங்குச்சந்தை (BSE), தேசியப் பங்குச்சந்தை (NSE) ஆகியவை தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு வர்த்தக அமர்வை நடத்துகின்றன. இதுதான் 'முகூர்த்த வர்த்தகம்' (Muhurat Trading) என்று அழைக்கப்படுகிறது. இந்து மரபில் தீபாவளி செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் லட்சுமி தேவியை வழிபடும் நாளாக இருப்பதால், புதிய முதலீடுகளைத் தொடங்குவதற்கு இந்த நாளை பலர் ஏற்றதாகக் கருதுகின்றனர்.
வழக்கமாகப் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் தீபாவளி நாளில், இந்தச் சிறப்பு வர்த்தக அமர்வுக்காகக் குறிப்பிட்ட நேரத்தில் சந்தைகள் திறக்கப்படும். முதலீட்டாளர்கள் புதிய பங்குகளை வாங்குவது, ஏற்கெனவே வைத்திருக்கும் பங்குகளில் வர்த்தகம் செய்வது என இந்த அமர்வில் பங்கேற்பார்கள். பலர் இந்த நாளில் ஒரு பங்கையாவது வாங்குவதைப் புதிய நிதியாண்டின் தொடக்கத்திற்கான நல்ல அறிகுறியாகக் கருதுகின்றனர்.
அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான முகூர்த்த வர்த்தகம் நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தீபாவளி லட்சுமி பூஜையை முன்னிட்டு நடைபெறும் இந்தச் சிறப்பு அமர்வு, பிற்பகல் 2.20 மணி முதல் 3.30 மணி வரை நடைபெறும் எனப் பங்குச்சந்தைகள் அறிவித்துள்ளன. ஆனால், முகூர்த்த வர்த்தகத்தில் பங்குகளை வாங்கினால் லாபம் கிடைப்பது உறுதியா என்ற கேள்வியும் எழுகிறது. சுப நேரத்தில் முதலீடு செய்வது பாரம்பரிய நம்பிக்கையாக இருந்தாலும், பங்குகளின் விலை உயர்வதற்கு நிறுவனத்தின் செயல்பாடு, நிதிநிலை, சந்தைச் சூழல், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. முகூர்த்த வர்த்தகத்தில் பங்கேற்பதால் மட்டும் லாபம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், பங்குகளை வாங்குவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள், வருவாய், வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் அதில் இருக்கும் ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்வதுதான். முதலீட்டின் நோக்கம், எவ்வளவு காலம் முதலீட்டைத் தொடர முடியும், இழப்புகளைத் தாங்கும் திறன் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் . சுப நேரத்தில் முதலீட்டைத் தொடங்குவது தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், முதலீட்டில் நீண்டகால வளர்ச்சியைத் தீர்மானிப்பது சுப நேரம் மட்டுமல்ல; சரியான திட்டமிடலும், நிறுவனத்தைப் பற்றிய புரிதலும், இடர் மேலாண்மையும்தான் என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
