கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, ராயகோட்டை, சூளகிரி, தளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சாமந்தி பூக்கள் பயிரிடப்பட்டிருந்தது. இந்தப் பூக்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததால் மலர் சாகுபடி விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
ஒசூர் பகுதியில் ரோஜா, செண்டு மல்லி, சாமந்தி, ஜர்பரா போன்ற மலர்களை விழா காலங்களை முன்னிட்டு பயிரிடுவார்கள். வெளி நாடுகளில் நடக்கும் சிறப்பு பண்டிகைகள், நிகழ்ச்சிகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும்.
இந்நிலையில் ஓசூரை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் திருவிழாக்களை எதிர்நோக்கி ஏராளமானோர் சாமந்தி பூக்களை பயிரிட்டிருந்தனர்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மலர்களின் விலைச்சல் அமோகமாக இருந்தும் சமீபத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, பூக்கள் விரைவில் அழுகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்பில்லாமல் போனதால், உள்ளூர் சந்தையில் விற்க வேண்டிய சூழ்நிலை. ஓசூர் சந்தையில் பூக்களின் வரத்து அதிகமானதால் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.