மானிய கேஸ் சிலிண்டர் 4.5 ரூபாயும், மானியமில்லா கேஸ் சிலிண்டர் 93 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ள காரணத்தால், இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. அதன்படி மானிய விலையில் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் ரூ.4.5ம், மானியமில்லா சிலிண்டர் ரூ.93ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 14.2 கிலோ அளவிலான மானிய சமையல் சிலிண்டரின் விலை சென்னையை பொறுத்தவரையில் ரூ.483.69, டெல்லியில் ரூ.496.69, மும்பையில் ரூ.498.38 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மானியம் இல்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.93 உயர்த்தப்பட்டதால், சென்னையில் ரூ.750, டெல்லி ரூ.742, மும்பையில் ரூ.718.5 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் 18 கோடிக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ள நிலையில், இந்த விலை உயர்வு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ரூ.93 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.