'மானியம் என்னும் மாயை' - எல்.பி.ஜி சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுவது எப்படி?

'மானியம் என்னும் மாயை' - எல்.பி.ஜி சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுவது எப்படி?
'மானியம் என்னும் மாயை' - எல்.பி.ஜி சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுவது எப்படி?

நவம்பர் 30-ம் தேதி எல்.பி.ஜி கேஸுக்காக முன்பதிவு செய்தேன். அப்போதே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், ஓரிரு நாட்களில் டெலிவரி செய்யப்படும் என்றும் குறுஞ்செய்தி வந்தது. ஒரு சிலிண்டரின் விலை ரூ.610. ஆனால் விலை மாற்றம் காரணமாக முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அன்று இரவே குறுஞ்செய்தி வெளியானது. இந்த நிலையில், அடுத்த நாள் காலை (டிச.1) புதிய விலையுடன் முன்பதிவு செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வெளியானது. அதன் விலை ரூ.660.

ஒரு நாளில் 50 ரூபாய் வீணாகிவிட்டதே என நினைத்தேன். ஆனால், அடுத்த 15 நாட்களில் சிலிண்டரின் விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டபோது 'குறைந்த விலையில் வாங்கி இருக்கிறோம்' என சந்தோஷப்படுவதா அல்லது தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறதே என கவலைப்படுவதா என குழப்ப மனநிலையில் இருந்தேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் 100 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மானியம் வழங்கப்படாமல், சந்தை விலையிலே விற்கப்படுகிறது. தேவைப்படுபவர்களுக்கு மானியம் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

மானியம் கிடைத்துவந்தாலும் எப்போதும் கிடைக்கும் என யாராலும் சொல்ல முடியாது. (ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானியத்தில் பெற்றுக்கொள்ள முடியும்) அதனால், வாங்கும்போது அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்னும் உணர்வு பொதுமக்களிடம் இருந்து வருகிறது. மானியம் என்பதே மாயை ஆகிவிட்டதாக மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

விலை நிர்ணயம் எப்படி?

Import parity price என்னும் முறையில் எல்பிஜி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் உள்ள எல்பிஜி விலையை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. சவுதி அரம்கோ நிறுவனத்தின் விலை, எல்பிஜியை பொறுத்தவரை பென்ச்மார்க் விலையாக இருக்கிறது. இந்த விலை மூலப்பொருள், போக்குவரத்துக் கட்டணம், துறைமுக கட்டணம், கஸ்டம்ஸ் வரி உள்ளிட்டவற்றை சேர்த்து ஐபிபி விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த விலை டாலரில் இருக்கும். அதன்பிறகு இதனை ரூபாயாக மாற்ற வேண்டும்.

இதற்குப் பிறகு உள்நாட்டு போக்குவரத்து, சிலிண்டர்களில் நிரப்பும் கட்டணம், மார்க்கெட்டிங் கட்டணம், லாபம், டீலர் கட்டணம் இவற்றுடன் ஜிஎஸ்டி சேர்ந்த பிறகு நமக்கான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மெட்ரிக் டன் கேஸ் 230 டாலர் ஆளவில் இருந்தது. ஆனால் தற்போது 450 டாலராக இருக்கிறது. இதனால் ரீடெய்லில் எல்பிஜி விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது.

ஆனால், இந்தியாவுக்கு தேவையான எல்.பி.ஜியில் பாதி அளவுக்கு மட்டுமே இறக்குமதி செய்கிறோம். மீதம் உள்நாட்டிலே தயாராவதால ஐபிபி-யை அடிப்படையாக கொண்டு ஒட்டுமொத்த சில்லறை விற்பனை விலையை எப்படி நிர்ணயம் செய்ய முடியும் என்று கேள்வி எழுகிறது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலை குறைந்தால், வரியைக் கூடுதலாக விதித்து வருமானத்தை பெருக்கலாம், விலை உயர்த்தாலும் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கும் வரிகள் மூலம் தொடர்ச்சியான வருமானம் கிடைத்துவிடும்.

ஆனால், தற்போது சம்பள குறைப்பு மற்றும் வேலை இழப்பு ஆகிய காரணங்களால் குடும்பத்தின் நிதி நிலைமை நெருக்கடியில் இருக்கும்போது இதுபோன்ற சிலிண்டர் விலையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வாரம் ஒருமுறையா?

தற்போது மாதத்துக்கு ஒருமுறை எல்பிஜி விலை நிர்ணயம் செய்யப்பட்டுவருகிறது. முதல்முறையாக டிசம்பர் மாதத்தில் இரு முறை எல்பிஜி விலை மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகின்றன. சர்வதேச சந்தை மற்றும் ரூபாய் ஏற்ற இறக்கத்தை பொறுத்து, வாரம் ஒருமுறை விலையை மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் சரிவில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் கருதுகின்றன. இது உறுதிபடுத்தப்படாத தகவல்தான் என்றாலும் இதற்கான சாத்தியம் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலையை இப்படித்தான் விலை நிர்ணயம் செய்துவந்தார்கள். அதுபோன்ற சமயங்களில் பெட்ரோல் விலையை இரண்டு ரூபாய் உயர்த்தினால்கூட பெட்ரோல் பங்குகளில் பெரும் வரிசை காத்திருக்கும். தற்போது பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் விலை உயர்வு குறித்து நாம் சிந்திக்க ஏதும் இல்லை என்னும் நிலைக்கு வந்துவிட்டோம். இன்னும் சில காலத்துக்கு பிறகு எல்பிஜி விலையிலும் இதேபோன்ற மனநிலைக்கு நாம் வந்துவிடுவோம். அந்த மனநிலைகூட பரவாவில்லை. ஆனால், மானியம் சரியாக வருகிறதா என்பதை கூட மறந்துவிடுவோம்.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com