மறந்துடாதீங்க... வருமான வரி தாக்கலுக்கு கடைசி வாய்ப்பு..!
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோருக்காக மார்ச் 31-ஆம் தேதி வரை சென்னையில் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருமான உச்ச வரம்பான இரண்டரை லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்து, வருமான கணக்கு தாக்கல் செய்யாத நபருக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. 2016 - 2017 மற்றும் 2017 - 2018ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செலுத்தாதோருக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலோனோர் கணக்கு தாக்கல் செய்ய முன்வந்துள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் நுங்கம்பாக்கம் மற்றும் மேற்கு தாம்பரத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அனைவரும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யுமாறு வருமான வரித் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காலை மணி 9.15 முதல் மாலை 5.45 மணி வரை பொதுமக்கள் தங்கள் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் விளக்கங்களுக்கு பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தை 044-28338014 / 28338314 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.