ஸ்மார்ட்போன் முதல் 'எனர்ஜி' வரை... ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டங்கள் - ஒரு பார்வை

ஸ்மார்ட்போன் முதல் 'எனர்ஜி' வரை... ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டங்கள் - ஒரு பார்வை
ஸ்மார்ட்போன் முதல் 'எனர்ஜி' வரை... ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டங்கள் - ஒரு பார்வை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 44-வது ஆண்டு பொதுக்குழு இன்று (ஜூன் 24) நடந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். மூன்று ஆண்டுகளில் ரூ.75,000 கோடி ரிலையன்ஸ் சார்பில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கிளீன் எனர்ஜியில் களம் இறங்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். இதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். சோலார் எனர்ஜி, எனர்ஜி ஸ்டோரேஜ் பேட்டரி தயாரிப்பு, கிரீன் ஹைட்ரோகார்பன் உள்ளிட்டவை இந்தப் புதிய நிறுவனம் தயாரிக்கும். இதற்காக ஜாம் நகரில் 5,000 ஏக்கரில் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்பிளெக்ஸ் அமைக்கப்பட இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அவரது புதிய அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்...

ஜியோ போன்:

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ போன் என்னும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை நிறுவனம் வெளியிட இருக்கிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி முதல் (செப்டம்பர் 10) இந்த போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. (இது தொடர்பாக கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் உரையாற்றினார்).

இந்த போனில் வாய்ஸ் அசிஸ்டெண்ட், தரமான கேமரா மற்றும் ஆண்ட்ராய்டின் புதிய அப்டேட்களும் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. (ஜியோவில் கூகுள் நிறுவனம் 4.5 பில்லியன் டாலர் அளவுக்கு கடந்த ஆண்டு முதலீடு செய்தது நினைவுகூரத்தக்கது).

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு 40 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் 10 கோடி வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் போனை பயன்படுத்திவருகின்றனர். சர்வதேச அளவில் குறைந்த விலையுள்ள 4ஜி ஸ்மார்ட்போனை இந்த வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவார்கள் என ரிலையன்ஸ் கருதுகிறது.

மேலும் 5ஜி சேவையில் கூகுள் கிளவுடும் ஜியோவும் இணைய இருக்கின்றன. இதன்மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வேகமாக இணைய சேவை கிடைக்கும்.

இயக்குநர் குழுவில் மாற்றம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் சவுதி அரம்கோ நிறுவனத்தின் தலைவர் யாசிர் - அல் - ருமாயன் (Yasir Al -Rumayyan) இணைய இருக்கிறார். 42-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் சவுதி அரம்கோ முதலீடு (20%) செய்ய இருக்கிறது என்பது அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து ஆயில் டு கெமிக்கல் பிஸினஸை தனியாகப் பிரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ரிலையன்ஸ் இயக்குநர் குழுவில் யாசிர் இணைய இருக்கிறார்.

இயக்குநர் குழுவில் இருந்த ஒய்பி திரிவேதி வயது மூப்பு காரணமாக இயக்குநர் குழுவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனம் திருபாய் அம்பானியின் நண்பர் இவர். 1992-ம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் இயக்குநர் குழுவில் திரிவேதி இருந்துவருகிறார்.

ரிலையன்ஸ் ரீடெய்ல்

கடந்த ஆண்டு சவாலான கால கட்டமாக இருந்தாலும் ரிலையன்ஸ் ரீடெய்ல் சிறப்பாக செயல்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 1500 புதிய ஸ்டோர்களை திறந்திருக்கிறோம். மொத்த ஸ்டோர்களின் எண்ணிக்கை 12711 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் வேலைகளை பாதுகாத்தது மட்டுமல்லாமல் புதிதாக 65000 பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு மேலே இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ரீடெய்ல் பிரிவில் மொத்தம் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம்.

மேலும், சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்துவரும் ரீடெய்ல் நிறுவனமாக ரிலையன்ஸ் ரீடெய்ல் திகழ்கிறது. மூன்று முதல் ஐந்தாண்டுகளில் தற்போது இருப்பதை விட மூன்று மடங்கு பெரிய நிறுவனமாக ரீடெய்ல் இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

சம்பளக் குறைப்பு இல்லை

ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நீதா அம்பானி, இந்த பேரிடர் காலத்தில் ரிலையன்ஸ் குழுமம் வேலை இழப்பு, சம்பள குறைப்பு, போனஸ் குறைப்பு உள்ளிட்ட எந்த செயலிலும் ஈடுபடவில்லை. அதேபோல மருத்துவ செலவுகள் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தேவைப்படுபவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டன. இருந்தாலும் பணியாளர்கள் சிலரை இழக்க வேண்டி இருந்தது.

அவர்களின் குடும்பத்துக்கு தேவையான அனைத்தையும் ரிலையன்ஸ் குழுமம் ஏற்றுக்கொள்ளும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சம்பளம், குழந்தைகளின் கல்லூரிபடிப்பு வரை செலவை ஏற்றுக்கொள்ளும், இதுதவிர ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது என நீதா அம்பானி தெரிவித்தார்.

இது தவிர நிறுவனத்தின் நிதி சார்ந்த தகவல்களையும் முகேஷ் அம்பானி அறிவித்தார். 44-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தாலும் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ரிலையன்ஸ் பங்கு 2.35 சதவீதம் அளவுக்கு சரிந்து முடிந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com