'Non-convertible Debentures' என்றால் என்ன? அதன் சாதகங்களும் பாதகங்களும்!

'Non-convertible Debentures' என்றால் என்ன? அதன் சாதகங்களும் பாதகங்களும்!
'Non-convertible Debentures' என்றால் என்ன? அதன் சாதகங்களும் பாதகங்களும்!

பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு தொடர்பான செய்திகளை சமீபத்தில் பார்த்திருக்க முடியும். ஆனால் அவையெல்லாம் 0.10 என்னும் அளவில்தான் இருக்கிறது. பிக்ஸட் டெபாசிட் வட்டியை நம்பி இருப்பவர்களுக்கு இந்த ஏற்றம் போதாது. அதே சமயம் பல என்.சி.டி.கள் (Non-convertible Debentures) குறித்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி உள்ளன.

பொதுத்துறை வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட்களில் வட்டி விகிதம் 5.5 சதவீதம் அளவுக்கு இருக்கிறது என்றால் சில என்.சி.டிகளில் இரு மடங்குக்கு அதாவது 11 சதவீதத்துக்கு மேல் வட்டி விகிதம் கிடைக்கிறது. அதனால் என்.சி.டிகளில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாக இருக்கிறது. குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள் மற்றும் நிரந்தர வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு.

மேலும் பணவீக்கம் அளவுக்கே பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் இருப்பதால் உண்மையான வளர்ச்சியை மக்களால் பார்க்க முடியாது. அதுவும் என்.சி.டிகளில் கவனம் செலுத்துவதற்கு முக்கியமான காரணமாகும்.

என்.சி.டி என்றால்?

கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும். இவற்றை என்.சி.டி என அழைக்கிறோம். இரு ஆண்டுகளுக்கு முன்பு சில பெரிய நிறுவனங்களின் என்.சி.டி. திவால் ஆனது. முதலீட்டாளர்களுக்கு சொன்ன தேதியில் சரியாக கொடுக்க முடியவில்லை. அதேபோல கோவிட் சிக்கல் காரணமாக நிறுவனங்களும் என்.சி.டி மூலம் நிதி திரட்டவில்லை. தற்போது பல நிறுவனங்கள் என்.சி.டி மூலம் நிதி திரட்டுகின்றன.

வங்கிகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் வருமானமும் சிறப்பானதாக இருக்கின்றன. ஆனால் வங்கியில் 5 லட்ச ரூபாய் வரை காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயம் வங்கி டெபாசிட் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் நிதி திரட்டும் நிறுவனத்தை பொறுத்து ரிஸ்க் இருக்கும்.

அதனால் என்.சி.டிகளில் முதலீடு செய்யும்போது ரேட்டிங்கை பொறுத்தே முடிவு செய்யவேண்டும். ரேட்டிங் அதிகமாக இருந்தால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். ரேட்டிங் குறைவாக இருந்தால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும், ரிஸ்கும் அதிகமாக இருக்கும். அதனால் AAA ரேட்டிங் உள்ள நிறுவனமாக பார்த்து முதலீடு செய்வது நல்லது. AAA ரேட்டிங் இருந்தால் 8.50 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வருமானம் கிடைக்கும். இதற்கு கீழ் ரேட்டிங் இருந்தால் வருமானமும் அதிகமாக இருக்கும் ரிஸ்கும் அதிகமாக இருக்கும். அதனால் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்கும்.

என்ன செய்யலாம்?

என்.சி.டி தொடர்பாக முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம் என பிரகலா வெல்த் மேனேஜ்மெண்ட் இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் பேசினேன். நிரந்தர வருமானம் வேண்டும் என்பவர்களுக்கு தற்போதைய சூழலில் பிக்ஸட் டெபாசிட் என்பது சரியான வாய்ப்பாக இருக்காது. இதனை விட அதிக வருமானம் வேண்டும் என்பவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் கடன் பத்திரங்கள் ஏற்றது. 7 சதவீதம் அளவுக்கு வருமானம் இருக்கும். இதைவிட அதிக வருமானம் வேண்டும் என்றால் ஒரளவுக்கு  நிறுவனத்தின் பின்புலம் மற்றும் வரலாறு இருக்கும் என்.சி.டிகளில் முதலீடு செய்யலாம். அதுவும் ரேட்டிங் பார்த்த பிறகு முதலீடு செய்யவும்.

ரேட்டிங் நன்றாக இருந்தாலும் உங்களுடைய மொத்த முதலீட்டையும் ஒரே பத்திரத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதிக ரிஸ்க் இருக்கிறது என்பதையும் முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல ரேட்டிங் இருந்த சில நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் கூட சரியாக திருப்பி தரவில்லை. முதலீட்டின் முதல் விதியே பணத்தை இழக்க கூடாது என்பதுதான்.

பேலன்ஸ்ட் மியூச்சுவல் பண்டில் (Balance Advantage Fund பிரிவு)முதலீடு செய்யும்போது பலவிதமான கடன் பத்திரங்கள் மற்றும் கணிமான அளவுக்கு பங்குகளில் முதலீடு செய்திருப்பார்கள் என்பதால் ரிஸ்க் கணிசமாக குறைந்திருக்கும். உதாரணத்துக்கு மாத வருமானம் வேண்டும் என்பவருக்கு என்னுடைய ஆலோசனை இதுதான். ரூ. 10 லட்சம் இந்த பேலன்ஸ்ட் பண்ட்களில் முதலீடு செய்யலாம்.  7 சதவீதம் அளவுக்கு வருமானம் என்றால் மாதம் சுமார் 6,000 ரூபாய் எடுத்துக்கொள்ள (Systematic Withdrawal Plan) முடியும்.

ஐந்தாண்டுகளுக்கு பிறகு முதலீடு செய்த தொகை ரூ.11 முதல் 12 லட்ச ரூபாயாகள் உயர்ந்திருக்கும். தவிர மாதம் 6,000 ரூபாய் எடுத்துக்கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக பார்த்தால்  ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு  வருமானம் இருக்கும் என சொக்கலிங்கம் கூறினார்.

என்.சி.டிகளில் முதலீடு செய்வது கூடுதல் வருமானம் இருக்கும். அதே சமயம் அதன் ரிஸ்க் தன்மையை புரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com