Infosys
InfosysFile Photo

வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தையில் கடும் சரிவு.. ரூ.73,060 கோடியை இழந்த இன்ஃபோசிஸ்!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை நேற்று ஒரே நாளில் 15% சரிவடைந்தது.
Published on

வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தையில் சரிவு

இந்தியப் பங்குச்சந்தைகள் 9 நாட்களுக்குப் பிறகு சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. வர்த்தக முடிவில், மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 520 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 910 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 121 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17 ஆயிரத்து 706 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், சந்தை எதிர்பார்ப்பைவிட குறைவாக இருந்ததால் அந்நிறுவனப் பங்குகள் 9 சதவீதம் சரிவு கண்டன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 25 காசுகள் சரிந்து 82 ரூபாய் 10 காசுகளில் நிறைவடைந்தது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 86 டாலரில் வர்த்தகமாகியது.

இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் 15% சரிவு

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் பங்குகள் ஒரே நாளில் 15 சதவீதம் வரையில் சரிந்தது. இதனால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு ரூ.73,060 கோடி சந்தை மதிப்பை இழந்தது.

அண்மையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 4வது காலாண்டு முடிவுகள் வெளியாகியிருந்தது. அதில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்தது. அதே நேரத்தில் செயல்பாடுகளின் மூலம் கிடைத்த நிறுவனத்தின் வருவாய் 16% உயர்ந்து ரூ. 37,441 கோடியாக இருந்தது. வருவாய் மற்றும் லாப புள்ளி விவரங்கள் இரண்டும் ஆய்வாளர்களின் மதிப்பீடுகளை விட குறைவாகவே இருந்தன. அதன் தாக்கம் பங்குச்சந்தையில் நேற்று எதிரொலித்தது.

எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.5,000 கோடி நஷ்டம்

தேசிய பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையான 1,185.30 ரூபாயைத் தொட்டது. இதனால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.5.08 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இன்ஃபோசிஸ் பங்கு விலை சரிவால் அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் எல்ஐசி நிறுவனத்துக்கு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எல்ஐசி நிறுவனத்துக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 7.71% பங்கு இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com