பணியாளர்களின் மருத்துவ வசதிக்காக 'பிராக்டோ'வுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் இந்தியன் வங்கி

பணியாளர்களின் மருத்துவ வசதிக்காக 'பிராக்டோ'வுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் இந்தியன் வங்கி
பணியாளர்களின் மருத்துவ வசதிக்காக 'பிராக்டோ'வுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் இந்தியன் வங்கி

பொதுத்துறை வங்கியான 'இந்தியன் வங்கி', ஹெல்த்கேர் நிறுவனமான 'பிராக்டோ'வுடன் புதிய ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதன்மூலம் வங்கியின் தற்போதைய மற்றும் முன்னாள் பணியாளர்கள் பிராக்டோ நிறுவனத்தின் மருத்துவ சேவையை பெறமுடியும் என இந்தியன் வங்கி தெரிவித்திருக்கிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் 74,000 நபர்கள் (முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்கள்) பயன் அடைவார்கள் என வங்கி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும் தரமான மருத்துவ ஆலோசனையை 24 மணி நேரமும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருக்கிறது.

இதுபற்றி இந்தியன் வங்கி கூறுகையில், "நிதி சேவைத் துறையில், பணியாளர்கள்தான் நிறுவனங்களின் மிகப்பெரிய சொத்து. அப்படியிருக்கும்போது, தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாளர்களின் உடல் நலனை கவனிப்பது எங்களுக்கு மிக மிக முக்கியம். பொது மருத்துவம் மட்டுமல்லாமல், 23 சிறப்பு மருத்துவர்களுடன் செயல்படவிருக்கிறோம். இதன்மூலம், தேவைப்பட்டால் வங்கி பணியாளர்கள் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தில் தற்போதைய பணியாளர்களை மட்டுமல்லாமல், முன்னாள் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களையும் இணைத்திருக்கிறோம். பலதரப்பட்ட நிதிசேவைகள் துறையில், பணியாளர் நலனுக்கான செய்யப்படும் முதல் முயற்சி எங்களுடையது தான்" என்று தெரிவித்திருக்கிறது.

பிராக்டோ நிறுவனம் இதுபற்றி கூறும்போது, "இந்த நெருக்கடியான காலத்தில் உடனடியான மருத்துவ வசதி கிடைப்பதுதான் முக்கியம். அதில் நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம். இதன்மூலம் நாட்டின் எந்த மூலையில் இருப்பவரும் தரமான மருத்துவ சேவையை பெறமுடியும். இந்தியன் வங்கி மட்டுமல்லாமல் பல கார்ப்பரேட் நிறுவனங்களும் எங்களின் சேவையை பெற்றுவருகின்றன" என்று தெரிவித்திருக்கிறது. மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்களிடம் உள்ளதாகவும் பிராக்டோ தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு நிறுவனங்களும் பணியாளர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்துவருவது ஆரோக்கியமானதே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com