இந்தியாவிலிருந்து வரும் தக்காளியை நிராகரித்த பாகிஸ்தான்!!
உள்ளூர் சந்தையில் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு இருந்த போதிலும் ”இந்தியாவிடம் மட்டும் வாங்க மாட்டோம்” என்று பாகிஸ்தான் உணவுத்துறை அமைச்சர் சிகந்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் லாகூர் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி, இந்திய மதிப்பில் 180 ரூபாய் முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தானில் தக்காளி பற்றாக்குறை ஏற்படும் போது இந்தியாவில் இருந்தே இதுவரை இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலிருந்து செல்லும் கண்டெய்னர் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் வியாபாரிகள் சிந்து பகுதியில் உற்பத்தியாகும் தக்காளிகள் எப்போது சந்தைக்கு வரும் என காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்றும், பலுசிஸ்தானில் விளையும் தக்காளி விரைவில் சந்தைக்கு வரும் என்றும் பாகிஸ்தான் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு லாகூர் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. நம் நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய போதிய வளங்கள் இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.