உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்

உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்

இந்தியாவில் யார் வருமான வரித் துறையினரிடம் வசமாகச் சிக்குவார்களோ இல்லையோ, நடுத்தர சம்பளதாரர்கள் மட்டும் தப்பிக்கவே முடியாது. நாளை (ஜூலை 1ஆம் தேதி) முதல் சில நிதி சார் விஷயங்கள் புதிதாக அமல்படுத்தப்பட உள்ளன. அதைத் தான் இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

கிரிப்டோ உட்பட டிஜிட்டல் சொத்துக்களுக்கு டிடிஎஸ்

சம்பளம் தொடங்கி, பல வித வருமானங்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யும் வழக்கம் இந்தியாவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக, இந்திய அரசு கிரிப்டோ, வெர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்கள் போன்றவைகளை நிர்வகிப்பது தொடர்பாக பலரோடு ஆலோசித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கிரிப்டோ & வி டி ஏ என்றழைக்கப்படும் வெர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களை வாங்குவோர், ஜூலை 1ஆம் தேதி முதல் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும் என நேரடி வரிகள் வாடியம் (சென்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டாக்ஸ்) அமைப்பு கடந்த ஜூன் 22ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

யார், எப்போது, எவ்வளவு பிடித்தம் செய்ய வேண்டும்?

ஒரு தனிநபருக்கு வியாபாரம் அல்லது ப்ரொஃபெஷன் தொழிலிலிருந்து எந்தவித வருமானமும் வரவில்லை எனில் அவர்கள் ஆண்டுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் கிரிப்டோ & வி டி ஏ-வை வாங்கினால் அவர்கள் 1% டிடிஎஸ் தொகையைப் பிடித்தம் செய்ய வேண்டும். ஒரு தனி நபருக்கு கடந்த நிதி ஆண்டில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரத்தில் டேர்ன் ஓவர் இருந்தால் அல்லது ப்ரொஃபெஷன் தொழிலில் கடந்த நிதி ஆண்டில் 50 லட்சத்துக்கு மேல் டேர்ன் ஓவர் இருந்தால், அந்த நபர்கள் ஆண்டுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் கிரிப்டோ & வி டி ஏ-வில் முதலீடு செய்தால் 1% டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும்.

கார்ப்பரேட் கம்பெனிகள் உட்பட மற்றவர்கள் அனைவரும் ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் கிரிப்டோ & வி டி ஏ சொத்துக்களில் முதலீடு செய்தாலே டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும். கிரிப்டோ & வி டி ஏ-வை வாங்கும் நபர், விற்பவரிடம் பணம் செலுத்தும் போது அல்லது பணம் அவர் கணக்கில் வரவு (கிரெடிட்) வைக்கப்படும் போது 1% டிடிஎஸ் தொகையைப் பிடித்து விற்பவரின் பெயரில் அரசிடம் செலுத்த வேண்டும்.

கிரிப்டோ & வி டி ஏ சொத்தை விற்கும் நபரிடம் பேன் அட்டை இல்லையெனில் 20%, விற்பவர் முந்தைய நிதி ஆண்டில் வருமான வரியைத் தாக்கல் செய்யவில்லை எனில் 5% டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும்.

பான்- ஆதார் இணைப்பு

இந்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக பான் அட்டையை ஆதார் எண்ணோடு இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. தொடக்கத்தில் கடந்த 2022 மார்ச் 31ஆம் தேதிதான் இரண்டையும் இணைக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. பிறகு 2022 ஏப்ரல் 1 முதல் 2022 ஜூன் 30க்குள் இணைப்பவர்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி முதல் பேன் மற்றும் ஆதாரை இணைப்பவர்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

உங்களின் பேன் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் உங்கள் பேன் அட்டை மற்றும் ஆதார் எண்ணைப் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status

கிரெடிட் கார்ட் சேவை நிறுத்தம்

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவர், தன் கடன் அட்டை சேவையை நிறுத்திக் கொள்ள பிரத்யேகமான மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ், ஐவிஆர், ஹெல்ப் லைன் போன்ற தளங்களை நிதி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என ஆர்பிஐ தன் சுற்றறிக்கை ஒன்றில் அழுத்தமாக உத்தரவிட்டுள்ளது. இது அனைத்து வகைப்படுத்தப்பட்ட வங்கிகள் (Scheduled Banks) மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்குப் (NBFC) பொருந்தும்.

ஒரு வாடிக்கையாளர் தன் சேவையை நிறுத்துமாறு கூறி மின்னஞ்சலோ, எஸ்.எம்.எஸ் மூலம் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் குறிப்பிட்டால் அடுத்த 7 வேலை நாட்களுக்குள் சேவையை நிறுத்தம் செய்து, அவர்களிடம் நிதி நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

அப்படி 7 வேலை நாட்களுக்குள் சேவை நிறுத்தப்படவில்லை எனில், நாள் ஒன்றுக்கு 500 வீதம், கடன் அட்டை கணக்கை மூடும் வரை நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளருக்கு அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். இது கடன் அட்டையில் எந்த ஒரு கடன் பாக்கியும் இல்லை என்றால் மட்டுமே பொருந்தும் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கடன் அட்டை வாடிக்கையாளர் ஓராண்டு காலத்துக்கு மேல் தன் கடன் அட்டையைப் பயன்படுத்தாமல் இருந்தால், அதன் சேவையை நிறுத்த நிதி நிறுவனங்கள் முனையலாம். அப்போது கடன் அட்டை சேவை நிறுத்தப் போவது குறித்து வாடிக்கையாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். 30 நாட்களுக்குள் நிதி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் தரப்பிலிருந்து பதில் கிடைக்கவில்லை எனில், நிதி நிறுவனங்கள் தன்னிச்சையாக அக்கணக்கை மூடலாம். மூடப்படும் கணக்கில் ஏதேனும் கிரெடிட் பாக்கி இருந்தால், அதை, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இந்த நடைமுறை ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

டீமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளுக்கான கே ஒய் சி

இந்தியாவில் பங்குச் சந்தையில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்பவர்கள் அனைவரும் டீமேட் அல்லது டிரேடிங் கணக்குகளைப் பயன்படுத்துவர். அப்படி பயன்படுத்துவோர், கட்டாயமாக கீழ் காணும் விவரங்களுக்கு சரியான கே ஒய் சி ஆவணங்களை சமர்பித்து சீர் செய்து கொள்ள வேண்டும். இது ஜூலை 1ஆம் தேதி முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பான் அட்டை, சரியான தொலைபேசி எண், வருமான வரம்புகள் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றன. கே ஒய் சி சரி செய்யாதவர்களின் டீமேட் கணக்கு முடக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

என் பி எஸ் மாற்றம்

நேஷனல் பென்ஷன் ஸ்கீம் என்றழைக்கப்படும் என் பி எஸ் முதலீடுகளில் உள்ள திட்டங்களுக்கு
E - Equity (ஈக்விட்டி சாதனங்களில் முதலீடு செய்யும் திட்டம்)
C - Corporate Debt (கார்ப்பரேட் கடன் திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டம்)
G - Government Securities (அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டம்)
A - Scheme A... என புதிதாக வகைப்படுத்த உள்ளனர். இது ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

- கெளதம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com