இணையத்தில் கொஞ்சம் உஷாரா இருங்க... 3 ஆண்டுகளில் 547 கோடி ரூபாய் மோசடி!!

இணையத்தில் கொஞ்சம் உஷாரா இருங்க... 3 ஆண்டுகளில் 547 கோடி ரூபாய் மோசடி!!
இணையத்தில் கொஞ்சம் உஷாரா இருங்க... 3 ஆண்டுகளில் 547 கோடி ரூபாய் மோசடி!!

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. சமூக வலைதளங்கள், பொழுது போக்குகள் என்பதைத் தாண்டி ஸ்மார்ட் போன்களில் பரிவர்த்தனைகளையும் நாம் செய்துகொண்டிருக்கிறோம். வங்கிகளின் தகவல்களை செல்போனுடன் இணைத்து வைத்திருக்கிறோம். போன் பே, கூகுள் பே போன்ற பல பரிவர்த்தனை செயலிகளின் மூலம் பணங்களை பரிமாறிக் கொண்டு இருக்கிறோம். முன்பெல்லாம் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால் வங்கிக்குச் சென்று குறிப்பிட்டவர்களின் வங்கிக்கணக்குக்கு அனுப்ப வேண்டும். பின்னர் ஏடிஎம் மூலமாகவே பணத்தை அனுப்பலாம் என்ற முறை வந்தது.

ஆனால் இன்று சம்பந்தபட்டவர்கள் பரிவர்த்தனை செயலிகளை வைத்திருந்தால் போதும், செல்போன் எண்ணை பதிவிட்டு பணத்தை நொடிப்பொழுதில் அனுப்பிவிடலாம். அதுமட்டுமல்ல கடைகளில் பணத்தை நீட்டுவதற்கு பதிலாக செல்போனை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி கைகளில் பணம் புழங்காமலேயே பரிவர்த்தனைகளை இந்த டிஜிட்டல் உலகம் எளிதாக்கிவிட்டது. நம்முடைய வேலைகளை பல மடங்கு குறைத்துவிட்டது. இப்படி டிஜிட்டல் உலகத்திற்கு பாசிட்டிவ் பக்கங்கள் நிறைய இருந்தாலும், இந்த டிஜிட்டல் உலகால் நூதன திருட்டுகளும் கோடிக்கணக்கில் நடந்துகொண்டே இருக்கின்றன.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இணையதளத்தில் ரூ.547 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. குறிப்பாக 2019-ம் ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வெறும் 92 நாட்களில் 128 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் , கிரெடிட் கார்டுகள், இணைய வங்கிச்சேவை ஆகிய பல வகைகளில் இந்த மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 21,041 புகார்கள் பதிவாகியுள்ளன.

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ரூ,101 கோடிக்கு மோசடி நடந்துள்ளது. ஆக மொத்தமாக 2017 ஏப்ரல் முதல் 2019 டிசம்பர் வரையிலான 3 ஆண்டுகளில் 547 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பாக ஒரு லட்சத்து 10ஆயிரம் புகார்கள் பதிவாகியுள்ளன.

இப்படி யார் எங்கு இருந்து திருடுகிறார்கள் என்று தெரியாமல் கோடிக்கணக்கில் மோசடிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக காவல்துறையினர் பலவிதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், மோசடி குறைந்ததாக தெரியவில்லை. வங்கியில் இருந்து போன் செய்கிறோம், உங்கள் OTP தாருங்கள், உங்கள் பேடிஎம் எண் என்ன என்று பலவிதமான போன் அழைப்புகள் இன்று மோசடிக்காக ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. இணையப் பயன்பாட்டில் உள்ளவர்கள், வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் என அனைவருமே உஷாராக இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட மோசடிகளை தவிர்க்க முடியும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

தொலைபேசியில் வங்கிக் கணக்குகள் தொடர்பாக யார் தகவல் கேட்டாலும் கூறக்கூடாது. OTP என்பது மிகவும் ரகசியமானது. அதனை எந்த வர்த்தகத்திற்காகவும் தொலைபேசியில் யாரிடமும் கூறக்கூடாது என பல விழிப்புணர்வு அறிவுரைகளை வங்கி நிர்வாகத்தினரும், போலீசாரும் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஏடிஎம் அட்டைகள் பயன்படுத்துபவர்கள் அருகில் இருப்பவர்களிடம் பாஸ்வேர்ட் சொல்வது, ஏடிஎம் அட்டை மீதே ரகசிய எண்ணை எழுதி வைப்பது போன்ற கவனக்குறைவான வேலைகளை செய்யக்கூடாது என்பதும் போலீசாரின் அறிவுரையாக உள்ளது.

ஒரு காலத்தில் வீட்டிற்குள் நுழைந்து திருடர்கள் திருடியதைப்போல இன்று இணையத்தின் வழியாக திருடர்கள் திருடுகிறார்கள். கொள்ளைக்கு வழி கொடுக்காமல் நாம் விழிப்புணர்வாக இருந்தாலே அது போன்ற இணையத்திருட்டை தடுக்கலாம். சற்று கவனமாக செயல்பட்டால் டிஜிட்டல் உலகை பயனுள்ளதாக வைத்துக்கொள்ளலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com