இவ்வளவு பணம் எப்படி வந்தது?: விளக்கம் கேட்கிறது ஐ.டி
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்களின் வருமானத்தைக் கணக்கிட்டு அதற்கு அதிகமாக டெபாசிட் செய்தவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது வருமான வரித்துறை.
நாடெங்கும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். மேலும் தங்களிடம் உள்ள பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய செல்லத் தகுந்த ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களின் விவரம் குறித்து வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 17.62 லட்சம் பேர் பண மதிப்பிழப்பு நேரத்தில் அதிகப்படியான தொகையை வங்கியில் செலுத்தியுள்ளதை கண்டறிந்த வருமான வரித்துறை, வருமானத்திற்கான ஆதாரங்களை அவர்களிடம் கேட்டிருந்து. இதுகுறித்து 9.72 லட்சம் பேர் விளக்கங்களை ஆன்லைன் மூலம் தெரிவித்துள்ளனர். ஆனால் 1.04 லட்சம் பேர் அதுகுறித்த எந்த விவரங்களையும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கவில்லை.
இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, தங்களின் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் அதிகப்படியான பணத்தை டெபாசிட் செய்துள்ள 5 லட்சத்து 56 ஆயிரம் பேரை வருமான வரித்துறை மீண்டும் கண்டறிந்துள்ளது. தங்களது வருமானம் குறித்து விளக்கம் அளிக்க அவர்களிடம் வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது.