வேலை இழப்பு ஆபத்தில் 70% பேர்... ஓட்டல், சுற்றுலா துறைக்கு பட்ஜெட் செய்யப்போவது என்ன?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்.1) தாக்கல் செய்யும் பட்ஜெட் 2021-ல் வேலை இழப்புகள் ஆபத்தால் அல்லாடும் ஓட்டல் - சுற்றுலா துறைக்கு எவ்விதமான சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கொரோனா காலத்தில் அதிக பாதிப்பை சந்தித்த துறைகளில் முன்னிலை வகிப்பவை, ஓட்டல் மற்றும் சுற்றுலா துறைதான். ஓட்டல் துறையில் உள்ள 70 சதவீத நேரடி பணியாளர்களின் வேலை ஆபத்தில் இருக்கிறது. தவிர, 40 சதவீத ஓட்டல்கள் மூடும் நிலையில் உள்ளதாக இந்திய ஓட்டல் சங்கம் தெரிவித்துள்ளது. அதனால், இந்த துறையினர் மத்திய அரசிடம் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறது.
ஓட்டல் துறைக்கு கட்டுமான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என ஓட்டல் துறையில் கோரிக்கை விடுத்திருக்கிறது. ரூ.25 கோடிக்கு மேலான ஓட்டல் துறை முதலீடுக்கு கட்டுமான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நீர், மின்சாரம் வங்கி கடன் போன்றவை எளிதாக கிடைக்கும்.
அதேபோல, எல்டிஏ அளவினை அதிகரிக்க வேண்டும். பெரு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அதிகம் பயணம் செய்வார்கள். தற்போது நான்கு ஆண்டுகளில் இருமுறை எல்டிஏவை க்ளைம் செய்துகொள்ள முடியும். இந்த விதிமுறையில் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் பயணங்கள் அதிகமாக நடக்கும்.
உதாரணத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாற்றம் கொண்டுவந்தால் ஓட்டல் மற்றும் சுற்றுலா துறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அதேபோல, வருமான வரி 30 சதவீதமாக இருக்கிறது. இந்த அளவினை குறைக்கும்பட்சத்தில் பொதுமக்களிடம் பணம் புழங்கும், பல துறைக்களுக்கும் இது சாதகமான முடிவாக இருக்கும், சுற்றுலா துறைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்திருக்கின்றனர்.

