சிகரெட்டுகள் மீதான தீர்வையை அதிகரிக்க நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த செஸ் வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. எனினும் இந்த உயர்வால் சிகரெட் விலைகள் அதிகரிக்காது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் சிகரெட் கம்பெனிகள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரி முன்பு செலுத்தப்பட்ட வரியை விட குறைவாக இருந்ததாக ஜேட்லி தெரிவித்தார். இதனால் சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கும் என அவர் கூறினார்.
சிகரெட்டுகள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் 5 சதம் தீர்வையும் விதிக்கப்படுகிறது. இவை தவிர சிகரெட்டின் நீளத்தை பொறுத்து ஒவ்வொரு ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 1591 ரூபாய் முதல் 4170 ரூபாய் வரை தீர்வை வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ஜிஎஸ்டியும், தீர்வையும் அதே அளவில் தொடர்கின்றன. ஆனால் ஆயிரம் சிகரெட்டுக்கா தீர்வை வரி 485 ரூபாய் முதல் 792 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிகரெட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் கூடுதல் லாபமே வரியாக வசூலிக்கப்படுவதால சிகரெட் விலைகள் உயராது என ஜேட்லி கூறினார்.