இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்... ஏசி, சிமெண்ட், கேமரா விலை குறைய வாய்ப்பு
ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டியை பொருத்தவரை 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. அண்மையில் பேசிய பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரி விதிப்பில் 99 சதவீதப் பொருட்கள் 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரிவிதிப்பிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார். நாட்டு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.
இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. எனவே இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை 18 சதவீதம் அல்லது அதற்கு கீழான வரிப் பிரிவிற்கு மாற்றும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொது சிமெண்ட், ஏசி., டிஜிட்டல் கேமரா உள்ளிட்டவைகள் 24% வரிவிதிப்பில் உள்ள நிலையில் அவைகளுக்கு 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக அவைகளின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 99 சதவீத பொருட்கள் 18 சதவீதத்திற்கும் குறைவான வரிவிதிப்பிற்கும் கொண்டு வரப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரத்தில் தலையிடுவது போல் உள்ளது என மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து இன்றைய கூட்டத்தில் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பில் பங்கேற்க அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்றுள்ளார்.