12000 பேரை பணிநீக்கம் செய்கிறது கூகுள்! சுந்தர்பிச்சையின் மெயிலும் அதிர்ச்சி பின்னணியும்!

12000 பேரை பணிநீக்கம் செய்கிறது கூகுள்! சுந்தர்பிச்சையின் மெயிலும் அதிர்ச்சி பின்னணியும்!
12000 பேரை பணிநீக்கம் செய்கிறது கூகுள்! சுந்தர்பிச்சையின் மெயிலும் அதிர்ச்சி பின்னணியும்!

கூகுள் நிறுவனமானது அதன் 12,000 பணியாளர்கள் அல்லது மொத்த பணியாளர்களில் 6% பேரை பணிநீக்கம் செய்வதாக தங்களது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் சிஇஒ சுந்தர்பிச்சை.

கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, வெள்ளிக்கிழமையான இன்று கூகுளின் ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். அதில், ”கூகுள் நிறுவனம் ஒரு கடினமான செய்தியை பகிர்ந்து கொள்கிறது, மொத்த பணியாளர்களில் 6% அல்லது 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக முடிவெடுத்திருக்கிறது. இந்த பணிநீக்கங்கள் உலகளவில் மற்றும் முழு நிறுவனத்திலும், அதன் வேலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும், தலைமை நிர்வாக அதிகாரியாக இதற்கு முழு பொறுப்பேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதத்தில் பல்வேறு காரணங்களை மேற்கோள் காட்டி, தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், மிக மோசமாகச் செயல்படும் 6% ஊழியர்களை அடையாளம் காணுமாறு மேலாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின் படி, கூகுள் தொழில்நுட்ப நிறுவனமானது, பணியாளர்கள் தங்கள் அடுத்த வாய்ப்பைத் தேடும்போது அவர்களுக்கு ஆதரவளிக்கும். அமெரிக்காவில் இருக்கும் ஊழியர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் நிறுவனமானது முழு அறிவிப்பு காலத்தில் இருந்து, குறைந்தபட்சம் 60 நாட்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும். எழுத்து மூலமான ஆல்பபெட்டின் அறிவிப்பானது ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதே சமயத்தில் உள்ளூர் வேலைவாய்ப்பு சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக மற்ற நாடுகளில் இருக்கும் ஊழியர்களுக்கான பணிநீக்க செயல்முறை அதிக நேரம் எடுக்கும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாற்றத்திற்கான முடிவானது, ”எங்கள் வேலையின் வலிமை, எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்றும் AIல் எங்களின் ஆரம்ப முதலீடுகள் ஆகியவற்றால், எங்களுக்கு முன்னால் ஒரு மிகப்பெரிய வாய்ப்பும், எதிர்காலமும் இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 25 ஆண்டைக் கடந்த பழமையான கூகுள் நிறுவனம், தற்போது கடினமான பொருளாதார சுழற்சிகளை கடக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டின் இறுதியில் கூகுள் சுமார் 1.56 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியது குறிப்பிடத்தக்கது. பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், நிறுவனத்தின் சராசரி சம்பளம் $2,95,884 என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் பணிநீக்க அறிவிப்பை அறிவித்துள்ளது கூகுள் தொழில்நுட்ப நிறுவனம்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களோடு, வேலையாட்களை வெளியேற்றிய பட்டியலில் இணைந்துள்ளது கூகுள். முன்னதாக மெட்டா சிஇஒ மார்க் ஜுக்கர்பெர்க், மெட்டா நிறுவனம் தனது பணியாளர்களில் 13% அல்லது சுமார் 11,000 பேரை குறைக்கும் என்று அறிவித்தார். அதேபோல டிவிட்டரை எலோன் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து, டிவிட்டர் அதன் 7,500 பணியாளர்களில் 50% க்கும் அதிகமானவர்களைக் குறைத்துள்ளது. மற்றும் அமேசான் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் 2023 நிதியாண்டின் முடிவில், $1 பில்லியன் செலவை மிச்சப்படுத்தும் முயற்சியில் 10,000 அல்லது கிட்டத்தட்ட 5% பணியாளர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.

ஒரு புதிய மேலாண்மை அமைப்புக்கு மாறுவதன் ஒரு பகுதியாக ’கூகுள்’, அதன் ஊழியர்களின் போனஸை நிறுத்திவைப்பதாக முன்னர் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com