ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.. இதுதான் காரணம்?
தங்கம் விலை உயர்வு வழக்கமான ஒன்றுதான். ஆனால் அது முன் எப்போதும் இல்லாத வேகத்தில் உயர்ந்து வருகிறது. வரும் வாரத்தில் தங்கம் சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாயை தொட்டுவிடுமோ என கதிகலங்கியுள்ளனர் சாமானியர்கள்.
சர்வதேச சூழல்களை கருத்தில் கொண்டு சீன அரசின் மைய வங்கி அதிகளவில் தங்கத்தை வாங்கி குவிப்பதே அதன் பாய்ச்சலுக்கு முக்கிய காரணம். இந்தாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 39.2 டன் தங்கத்தை வாங்கியுள்ளது சீன ரிசர்வ் வங்கி. இதோடு சேர்த்து சீனா வைத்துள்ள தங்கத்தின் மதிப்பு 2 ஆயிரத்து 298 டன் ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் மீதான நம்பகத்தன்மை குலைந்து வரும் நிலையில் டாலர் மீது நம்பிக்கை வைத்து சீனா அதிகளவில் வாங்கி வருகிறது. சீனாவை பார்த்து அதே பாதையில் மற்ற நாடுகளும் தங்கத்தை அதிகளவில் வாங்கி வருகின்றன.
ஹமாஸ்-இஸ்ரேல் போர், ரஷ்யா-உக்ரைன் போர், ஈரான்- இஸ்ரேல் போர் என அதிகளவிலான போர்களும் எல்லா நாடுகளையும் தங்கத்தை நோக்கி ஓட வைத்துவிட்டன. இந்திய ரிசர்வ் வங்கியிடம் 880 டன் தங்கம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 58% அதிகம். போர்கள் ஓய்ந்து பொருளாதாரங்கள் வலுப்படும் வரை தங்கத்தின் ஓட்டம் ஏறுமுகமாகவே இருக்கும் என்பதே நிபுணர்களின் கணிப்பு.