தங்கம் ஏன் சார் இப்படி ஏறுது... தங்கத்தில் முதலீடு செய்யலாமா..?

தங்கம் விலை ஏற்றம் - முதலீடு செய்ய சரியான நேரமா?
தங்க முதலீடு
தங்க முதலீடுImage by Steve Bidmead from Pixabay

தங்கம் தான் பெரும்பாலான இந்தியர்களுக்கு விருப்பமான சொத்து வகை. உலகின் மற்ற எந்த நாட்டினரும்  நம் இந்தியர்களைப் போல் தங்கம் வாங்க ஆர்வம்  காட்டுவதில்லை. நம் நாட்டில் தங்கத்திற்கு மூன்று வகையான மதிப்பு உண்டு.

முதலாவதாக "நுகர்வு மதிப்பு" (Consumption value)- நகையாக வாங்கி அணிவது, வீட்டு விசேஷங்களுக்காக  சேர்ப்பது , உறவினர் நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்குப் பரிசாக தருவது. 

இரண்டாவது "சமூக மதிப்பு" (social  Value) -  அதிக நகைகள் அணிவது சமூகத்தில் தங்கள் மதிப்பை உயர்த்தி காட்டுவதாக மக்கள் எண்ணுவது  , அவ்வாறு அணிந்தவர்களை சமூகத்தில் சக்தி வாய்ந்தவர்களாக பார்ப்பது .

மூன்றாவது "முதலீட்டு மதிப்பு" (Investment Value) - தங்கத்தை முதலீடாக  எண்ணி வாங்குவது, அதாவது வாங்கி சில ஆண்டுகள் கழித்து விலை ஏறியவுடன் விற்பது. அல்லது தேவையான நேரத்தில் அடமானம் வைக்க . மற்ற பொருட்களை அடமானம் வைத்து பணம் பெறுவதைவிட தங்கத்தை அடமானமாக வைத்து பணம் பெறுவது சுலபமான ஒன்று. இந்தியர்கள் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கு இது மிகமுக்கியமான காரணம்.

மற்ற எந்த சொத்து வகைகளிலும் இது போல் மூன்று வகையான மதிப்புகளை தருவது இல்லை . Real estate கொஞ்சம் இதற்கு அருகில் வரும், ஆனால் அதை சிறுகச்சிறுக சேமிக்க முடியாது . Mutual funds க்கு "முதலீட்டு மதிப்பு" மட்டுமே உண்டு.  இதனால் தான் பெரும்பாலானோர் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் .

Gold
GoldDalle3

முதலீட்டு பார்வையில் தங்கத்தின் குணாதிசியங்கள் :

தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு

உலகம் முழுவதும் உளவியல் ரீதியாக தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகின்றது . எப்போது உலகம் முழுவதும் ஒரு நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலை வருகிறதோ அப்போது முதலீட்டாளர்கள் மற்ற சொத்து வகைகளை (அதாவது mutual fund, stocks, bonds )  விற்றுவிட்டு தங்கத்திற்கு மாறுகின்றனர். 

தங்கத்தில் வரும் returns

குறுகிய காலத்தில் தங்கம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் , நீண்ட காலத்தில் தங்கம் பணவீக்கத்திற்கு மாற்றாக இருக்கும். பங்கு சந்தை அளவுக்கு returns இல்லையென்றாலும் பணவீக்கத்தை தாண்டிய ஒரு வருமானத்தை கொடுக்கிறது . அட்டவணையை பார்க்க..

Gold returns on Investment
Gold returns on InvestmentMint Newspaper

Source: Mint Newspaper

பாதுகாப்பு செலவு

தங்கம் திருடு போகும் ஆபத்து உள்ளதால், தங்கத்தை நீங்கள் பாதுகாக்கும் செலவு நீண்ட காலத்தில் அதிகம்.

தங்கம் ஏன் இப்போது உயர்கிறது

தங்கம் உற்பத்தி என்பது வளர்ச்சியில்லாத ஒன்று. எனவே எப்போதெல்லாம் உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி இருப்பு வைக்க ஆரம்பிக்கின்றனவோ அப்போது தங்கம் விலை உயரும். கடந்த சில மாதங்களாக தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்க ஆரம்பித்து உள்ளன . குறிப்பாக சீனா, ரஷ்யா போன்றவை டாலரின் ஆதிக்கத்தை குறைக்க முயல்கின்றன. எனவே டாலரை விற்று தங்கத்தை வாங்குகின்றனர் .   மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல், அமெரிக்காவில் இந்த ஆண்டு வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் போன்ற காரணங்களாலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. வட்டி விகிதங்கள் குறையும்பட்சத்தில் இன்னும் விரைவாக தங்கம் ஏற்றம் காணலாம். இஸ்ரேல், ஈரான் போர்ச் சூழலும் உக்கிரமடைந்துவருவதால், தங்கம் பெரிய அளவிற்கு இறங்காது என முதலீட்டார்கள் கருதுகிறார்கள்.

இன்னும் உயருமா? ஆமாம் அமெரிக்காவில் விலைவாசி கட்டுக்குள் வர ஆரம்பித்து பெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க ஆரம்பிக்கும் போது இன்னும் 10-15% வரை உயரலாம்

தங்கத்தை எப்போது வாங்கலாம்

நம்மில் பெரும்பாலோனோர்க்கு தங்கம் விலை கூடும் இந்த சமயத்தில் வாங்கலாமா? அல்லது விலை சிறிது குறைந்தவுடன் வாங்கலாமா என்று குழப்பம். தங்கம் போன்ற உலோகங்களை வாங்குவதற்கு Chart பார்த்தோ , பங்குகளை போன்று சராசரி தினசரி விலையை (Moving average) வைத்தோ முடிவு செய்ய முடியாது. கொரோனா தாக்கிய சமயத்தில் தங்கம் புதிய உச்சத்தை தொட்டது . ஆனால் அதன் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது,  பொருளாதாரம் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருந்தபோது கூட அனுபவ முதலீட்டாளர்கள் தங்கம் விலை கூடும் என்று எண்ணினர் . ஆனால் அது அந்த அளவு உயரவில்லை. மாறாக பங்குச்சந்தையும் , கிரிப்டோ போன்றவையும் உயர ஆரம்பித்தன.  எனவே "Perfect timing " யாராலும் செய்ய முடியாது. விலை சிறிது குறையும் போதெல்லாம் சிறிது சிறிதாக வாங்கலாம்.

தங்கத்தை சேமிக்கும் வழிகள்

தங்கத்தை  சேமிக்க பல வழிகள் உள்ளன . ஆபரணம் , நாணயம் , கட்டிகளாக, டிஜிட்டல் தங்கம் , ETF, கோல்ட் Funds, தங்க பத்திரங்களாக (SGB) வாங்கி சேமிக்கலாம். அட்டவணையில் எந்த வழியில் தங்கத்தை சேர்த்தால் லாபம் என்று பார்க்கலாம். 

எப்படி முதலீடு செய்தால் தங்கம் லாபம்..?
எப்படி முதலீடு செய்தால் தங்கம் லாபம்..?PersonalFn.com

எப்படி சேர்த்தால் அதிகம் நஷ்டம் இல்லாமல் சேமிக்கலாம்

மாத மாதம் நகையை சேமிக்காமல் விலை குறையும் போதெல்லாம் கூடுதலாக வாங்கி சேமிக்கலாம் .  2-3 ஆண்டுகளுக்குள் வீட்டில் விசேஷம் என்றால் நகையாக வாங்கி சேமிக்கலாம் . 3 ஆண்டுகளுக்கு மேல் என்றால் Gold ETF ஆகவோ , SGB (Sovereign Gold Bond) எனப்படும் மத்திய அரசின் நகை பத்திரமாகவோ வாங்கி வைப்பது லாபம். 8 ஆண்டு கழித்து நகை தேவை என்றால் SGB அ ETF ஆக சேமித்து வைத்து, நகை தேவைப்படும் ஓர் ஆண்டுக்கு முன்னதாக நகை கடையில் மாத தவணையில் பணம் செலுத்தி 12வது மாதத்தில் சில சலுகைகளுடன் நகை வாங்கலாம் . 


எவ்வளவுதங்கம்சேமிக்கலாம் : நுகர்வுமதிப்பும் , சமூகமதிப்பும் உள்ள நமது நாட்டில் தங்கத்தை சேமிப்பாகக் கருதுவது அவசியமான ஒன்று. மத்தியதரவர்க்கத்தினர் தாங்கள் செய்யும் முதலீட்டில் 10-20% வரை தங்கமாக வைத்துக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com