நாடுகளுக்கிடையில் அரசியல் பதட்டங்கள் அதிகரிக்கும் போது, முதலீட்டாளர்கள் பெரும்பாலும் தங்கத்தின் பக்கம் திரும்புகின்றனர். இது நிச்சயமற்ற காலங்களில் நிலையான முதலீடாகக் கருதப்படுகிறது. போர் அல்லது பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் காலங்களில், தங்கத்தில் முதலீடு செய்வது "பாதுகாப்பான புகலிடமாக" (Safe haven) பார்க்கப்படுகிறது.
ஒரு நிறுவனத்தின் செயல்திறனின் அடிப்படையில் மதிப்பில் ஏற்ற இறக்கம் ஏற்படக்கூடிய "பங்குகள்" அல்லது பணவீக்கம் காரணமாக பலவீனமடையக்கூடிய "நாணயங்கள்" போன்றவற்றைப் போல் அல்லாமல், "தங்கம்" அதன் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள முனைகிறது. இந்த ஆண்டு மட்டும் தங்கம் ரூபாய் மதிப்பில் 21% உயர்ந்துள்ளது, அதே சமயத்தில் Nifty 15% மட்டுமே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளில் வளர்ந்து வரும் நிதிப்பற்றாக்குறையும் தங்கத்தின் தேவையை உயர்த்துகிறது என்று HSBC வங்கி குறிப்பிடுகிறது. மேலும் சீனா தொடங்கி ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகள் வட்டி விகிதத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் விலை உயர்வுக்கு ஆதரவாக உள்ளதாக வங்கியின் ஆய்வாளர்கள் ஒரு குறிப்பில் தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் மத்திய வங்கிகள், 2022 மற்றும் 2023 நிலைகளுடன் ஒப்பிடுகையில் தங்கத்தைக் கொள்முதல் செய்வது மிதமானதாக இருந்தாலும், இன்னும் வாங்குபவர்களாகத் தொடர்கின்றனர் என்பதையும் HSBC எடுத்துக்காட்டுகிறது.
வரும் நாட்களில் மத்திய வங்கி கொள்முதல், டாலர் மதிப்பு, உள்நாட்டுப் பண்டிகைகள் மற்றும் திருமண காலங்களின் எதிர்கால தேவை ஆகியவை மேலும் விலை அதிகரிக்கும் காரணிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், மோதிலால் ஓஸ்வால் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.86,000 ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.
தங்கத்தின் விலை உயர் மட்டங்களில் இருந்து சரிவுக்கு இழுத்துச் செல்லும் காரணிகளாக அனலிஸ்டுகள் கூறுவது, "தங்கத்தின் விலை மேலும் உயராமல் கட்டுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க காரணியான அமெரிக்க டாலர் குறியீடு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது, இது சமீபத்தில் ஒரு மாத உயர்வை எட்டியது. கூடுதலாக, சென்ற வாரம் வந்த அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கை எதிர்பார்ப்புக்கு மாறாக வலுவாக வந்தது, இது US Fed-ஐ மெதுவாக வட்டி விகிதத்தைக் குறைக்க வழி செய்யும் என நம்பப்படுகிறது. மேலும் நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் வரும் மாதங்களில் குறையலாம். இது போன்ற வலுவான பொருளாதாரக் குறிகாட்டிகள் கணிசமான பணமதிப்பிழப்புக்கான வாய்ப்பைக் குறைத்து, டாலரை வலுப்படுத்தி தங்கத்தை மேலும் உயராமல் இருக்க வழி செய்கிறது."
ஒரு பெரிய ஏற்றத்திற்குப் பிறகு 2012 முதல் 2018 ம் ஆண்டு வரை தங்கம் விலை சர்வதேச சந்தையில் இறக்கத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் இருந்து வரவிருக்கும் பணவீக்கம் தொடர்பான தரவு அறிக்கை தங்கத்தின் விலையில் குறுகிய காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். முதலீடாகத் தங்கத்தைச் சேமிக்கும் போது அது உங்கள் போர்ட்போலியோவில் 10-15% அளவு நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.