புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. முடிச்சு உட்டீங்க போங்க டிரம்ப்..!
பொருளாதாரத்தை வைத்து டிரம்ப் ஆடிக்கொண்டிருக்கும் இந்த பரமபதத்தில் , இன்னும் பாம்பின் பிடியில் சிக்காமல் ஏணியைப் பிடித்து உயர்ந்து கொண்டே இருப்பது தங்கமும், வெள்ளியும் தான். வெள்ளியும், தங்கமும் மாறி மாறி உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த ஆண்டின் இறுதியில் தான், தங்கம் 3000 டாலரை தொடும் என பலரும் கணித்திருந்தார்கள். ஆனால், அதை இன்றே சாத்தியப்படுத்திவிட்டது டொனால்டு டிரம்பின் பொருளாதாரக் கொள்கை. வரி விதிப்பில் தொடர்ந்து டிரம்ப் கறாராக இருப்பதால், அமெரிக்க பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி dow 1.5 சதவிகிதமும், nasdaq 2.2 சதவிகிதமும் குறைந்திருக்கிறது. அமெரிக்க மார்க்கெட் தொடர்ந்து ரத்தக்களறியாக இருக்கிறது. நாளை இந்திய பங்குச்சந்தைகள் ஹோலி பண்டிகையையொட்டி விடுமுறை என்பதால், நாம் ' அப்பாடா ' என கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், வெள்ளி இரவும் dow, Nasdaq அடி வாங்கினால், திங்கள் அன்று இந்திய பங்குச் சந்தைகளில் டமால், டுமீல் சத்தம் கேட்க அதிக வாய்ப்புண்டு.
இன்று ஒரே நாளில் தங்கம், 1.45% உயர்ந்து 3000 அமெரிக்க டாலர்கள் என்னும் இலக்கை தொட்டுவிட்டது. இந்தியாவிலும் கிராமிற்கு தங்கம் 100 ரூபாய் வரை விரைவில் உயர வாய்ப்பதிகம். தங்கம் மீண்டும் புதிய உச்சத்தை தொடவிருக்கிறது. டிரம்ப் வர்த்தக போருக்கு ஓய்வு கொடுக்கவில்லையென்றால், தங்கம் வெள்ளி விண்ணை நோக்கி பறப்பத்தை யாராலும் தடுக்க முடியாது.
தங்கத்தைவிடவும், வெள்ளியில் ஏற்ற இறக்கங்களை நாம் அதிகம் காண முடியும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், வெள்ளி அதன் உச்ச விலையை இந்தியாவில் அடைந்தது. அக்டோபர் இறுதியில் வெள்ளி 1 லட்ச ரூபாயை தொட்டது. அதன் பின்னர், வீழ்ச்சியை சந்தித்த வெள்ளியின் விலை, டிசம்பர் இறுதியிலிருந்து மீண்டும் உயரத் தொடங்கியது. இன்று அமெரிக்க நிலவரப்படி வெள்ளியானது 1.31 சதவிகிதம் உயர்ந்து இந்திய மதிப்பில் 1 லட்ச ரூபாயை கடந்திருக்கிறது.
டிரம்ப்பின் பொருளாதார கொள்கைகள் தொடர்ந்தால், தங்கம் வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு கொண்டாட்டம் தான். தங்கத்தின் இந்த விலையேற்றம், இந்திய மார்க்கெட்டிலும் விரைவில் எதிரொலிக்கும் என நம்பலாம்.