நாளுக்கு நாள் உயரும் தங்கத்தின் விலை... ரூ32 ஆயிரத்தை நெருங்கியது .!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 980 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 840 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 16 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 179 ரூபாயாகவும் சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 432 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
ஆண்டு தொடக்க நாளான ஜனவரி ஒன்றாம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாள் தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 888 ரூபாய்க்கும், ஜனவரி 3 ஆம் தேதி ஒரு சவரன் 30 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அடுத்தடுத்த நாட்களில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்த தங்கத்தின் விலை தற்போது 32 ஆயிரத்தை நெருங்கி என்றும் இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தை, மாசி மாதங்களில் திருமண நிகழ்ச்சிகள் வெகுவாக நடைபெற்று வருகின்றன. இந்த காலகட்டத்தில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.