‘என்னப்பா சொல்றீங்க..?’ - தங்கம் விலை சவரனுக்கு 80,000 ரூபாயாக உயருமா?
சென்னையில் ஆபரணத் தங்கம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து ஒரு சவரன் 62 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது. அதாவது, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 13 மாதங்களில் சவரனுக்கு சுமார் 16 ஆயிரம் ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் தங்கம் ஒரு சவரன் 47 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் பிப்ரவரி 15ஆம் தேதி அந்த ஆண்டின் குறைந்த அளவாக 45 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 31ஆம் தேதி அப்போதைய புதிய உச்சமாக ஒரு சவரன் 59 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டின் ஜனவரி 31ஆம் தேதியான இன்று வரலாறு காணாத ஏற்றமாக ஒரு சவரன் 61 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 120 ரூபாய் விலை உயர்ந்து 7 ஆயிரத்து 730 ரூபாய்க்கும், ஒரு சவரன் 960 ரூபாய் விலை அதிகரித்து 61 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் விலை உயர்ந்து 107 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. டாலருக்கு மாற்று கரன்சியை உருவாக்க முயன்றால் அமெரிக்காவில் உங்கள் பொருட்களை விற்க மறந்திடுங்கள் என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது போன்ற காரணங்களால் பாதுகாப்பான முதலீடாக கருதும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளதே அதன் விலை உயரக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதனை விட அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக நடப்பாண்டின் இறுதிக்குள் தங்கம் விலை ஒரு சவரன் 80 ஆயிரம் ரூபாயை எட்ட வாய்ப்புள்ளதாக நகை வணிகர்கள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையிடம் பேசிய அவர், “கண்டிப்பாக தங்கத்தின் விலை ஏற்வதற்கு உண்டான வாய்ப்புகள்தான் இருக்கும். வரும் மார்ச் மாதத்திற்குள் தங்கம் ஒரு சவரன் ரூ.64 ஆயிரமாக உயரக்கூடும். ஒரு கிராம் 8 ஆயிரம் ரூபாயை எட்டக்கூடும். நடப்பாண்டின் இறுதிக்குள் ஒரு சவரன் ரூ. 80 ஆயிரமாக ஏற்றம் காணும். கிராம் ஒன்று 10 ஆயிரம் ரூபாய்க்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.