தங்க முலாம் பூசிய மிட்டாய் விற்பனை: இது டெல்லி ருசிகரம்!
இனிப்பு பலகாரங்களில் வெள்ளி முலாம் பூசிய இனிப்புகளை வழக்கமாக சிலர் பார்த்திருப்போம், சிலர் ருசித்திருப்போம், சிலர் கேள்விப்பட்டிருப்போம். இப்படி இருக்க டெல்லியில் இயங்கிவரும் இனிப்பகம் ஒன்றில் தங்க முலாம் பூசப்பட்ட ‘மிட்டாய்’ விற்பனைக்கு வந்துள்ளது.
டெல்லியின் மௌஜ்பூர் பகுதியில் இயங்கி வரும் ஷாகுன் ஸ்வீட்ஸ் என்ற இனிப்பகத்தில்தான், தங்க முலாம் பூசிய மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது அதன் வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் சமையல் கலை வல்லுனர் ஒருவர் சுடச்சுட மிட்டாய் தயார் செய்து, அதில் தங்க முலாம் பூசி, வாடிக்கையாளர்களுக்கு பகிர்கிறார்.
இந்த மிட்டாய் ஒரு கிலோ 16000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல மில்லியன் முறை இந்த வீடியோக்களை சமூக வலைதள பயனர்கள் பார்த்துள்ளனர். சுமார் ஆறு லட்சம் லைக்குகளை இந்த வீடியோ கடந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர் ஒருமுறையேனும் இதை ருசிக்க வேண்டும் என்றும், சிலர் இதனை நகைப்புடனும் கமெண்ட் செய்து வருகின்றனர்.