தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' கட்டாயம்: பின்னணி என்ன? - தெளிவான புரிதலுக்கு சில தகவல்கள்

தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' கட்டாயம்: பின்னணி என்ன? - தெளிவான புரிதலுக்கு சில தகவல்கள்
தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' கட்டாயம்: பின்னணி என்ன? - தெளிவான புரிதலுக்கு சில தகவல்கள்

தங்க நகைகளுக்கு இன்று முதல் (ஜூன் 16) ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையம் இல்லை என ஜூவல்லரி நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கை எழவே முதல் கட்டமாக 256 மாவட்டங்களில் மட்டுமே ஹால்மார்க் முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, ஆகஸ்ட் மாதம் வரை எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

256 மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயம் என்றாலும் ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு கீழ் விற்பனை இருக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாட்ச், பேனா உள்ளிட்டவற்றுக்கும், குந்தன் உள்ளிட்ட சில ஆபரங்களுக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள், ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளை கொடுத்தால், அதனை நகைக் கடைகள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதற்கான நடவடிக்கைகள் 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் ஹால்மார்க் கட்டாயம் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பிறகு காலக்கெடு ஜூன் மாதம் 1-ம் தேதி நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 15-ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டது. ஹால்மார்க் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட நகையை விட ஐந்து மடங்கு அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் ஹால்மார்க்?

கடந்த ஐந்தாண்டுகளில் ஹால்மார்க் மையங்கள் 454-ல் இருந்து 945 ஆக உயரந்திருக்கிறது. இதுவரை ஹால்மார்க் முத்திரை விருப்பத்தின் அடிப்படையில் இருக்கிறது. தற்போது கட்டாயம் ஆக்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை உருவாகும். வாடிக்கையாளர்கள் கேட்கும்பட்சத்தில் கடைக்காரர்கள் ஹால்மார்க் குறித்த தகவலை தெரிவிக்கவேண்டும். நகைக்கான பில்லில் ஹால்மார்க் கட்டணத்தை குறிப்பிட்டு கேட்டு கூட பில் பெற்றுக்கொள்ளலாம்.

இதைவிட முக்கியம் வியன்னா ஒப்பந்ததில் (vienna convention) இணைவது மிக அவசியம் என மத்திய அரசு கருதுகிறது. சர்வதேச அளவில் உலோகங்கள் பரிமாறிக்கொள்வதற்கா உருவாக்கப்பட்ட அமைப்பு இது. இதில் இன்னும் இந்தியா இணையவில்லை. ஆஸ்திரியா, சைப்ரஸ், டென்மார்க், ஸ்வீடன், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் உறுப்பினராக இருக்கும்பட்சத்தில் எந்தவிதமான சோதனையும் இன்று தங்கத்தை ஏற்றுமதி செய்யமுடியும். இந்த அமைப்பில் இணைவதற்கு முதல் படியாக ஹால்மார்க்கை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

அப்படியானால் ஏன் விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என இந்த துறையை சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம். "இது ஒரு வகையான காம்ப்ரமைஸ் என்றே நம்மிடம் தெரிவித்தனர். எந்தெந்த மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரை மையம் இருக்கிறதோ அங்கு மட்டும் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நிஜத்தில் இந்த தொழில் அப்படி நடப்பதில்லை. நகைக் கடைகள் இருக்கும் இடத்தில் தயாரிக்கப்படுவதில்லை. உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட இடங்களில் உள்ளன. அங்கிருந்து ஹால்மார்க் முத்திரை செய்யப்பட்ட பிறகுதான் விற்பனையகங்களுக்கு ஆபரணங்கள் செல்கிறது. அரசுக்கும் இது தெரியும். இருந்தாலும் இந்தச் சலுகை வழங்கி இருக்கிறது. விரைவில் கட்டாயம் ஆக்கப்படும்" என தெரிவித்தார்.

இது தொடர்பாக சிறு நகை வியாபரி ஒருவரிடம் பேசினோம். "ஹால்மார்க் முத்திரை என்பது எங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் யுனிக் ஐடி உருவாக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதன்மூலம் ஒவ்வொரு நகையையும் ட்ராக் செய்ய முடியும். ஒரு நகையின் வரலாறு அதில் இருக்கும். எங்கிருந்து வாங்கப்பட்டது, யார் மூலம் செய்யப்பட்டது, எந்த ஜூவல்லரி நிறுவனத்துக்கு விற்கப்பட்டது என அனைத்தும் டிராக் செய்யப்படும். சிறு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவை பின்பற்றுவதும் சிரமம் என தெரிவித்தார்.

ஆனால், இதற்கு பின்னால் இருக்கும் காரணம் வேறு. இந்தியா சுமார் 700 முதல் 800 டன் அளவுக்கு தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இது இல்லாமல் சுமார் 120 டன் அளவுக்கு முறையற்ற வழிகளில் இந்தியாவுக்கு தங்கம் வருகிறது. இதனைத் தடுக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு நகையில் உற்பத்தியாளரை குறிப்பிடும்பட்சத்தில் பெரும்பாலும் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருவார்கள். தற்போது ஜிஎஸ்டி வரம்புக்குள் வராமலே பல நிறுவனங்கள் வர்த்தகம் செய்கின்றன. இதனை குறைப்பதற்காக யுனிக் ஐடி எண் உருவாக்கப்ப்படுகிறது என்றும் தெரிகிறது.

இதுதொடர்பாக உலக தங்க கவுன்சிலின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரத்திடம் (Somasundaram PR, Managing Director, India, World Gold Council) உரையாடினோம். அவர் கூறும்போது "ஹால்மார்க் என்பது அவசியமானது. இதன்மூலம் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை உருவாகும். உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டு சந்தையிலும் நம்பிக்கை உயரும். இந்தியாவில் சிறப்பான டிசைன் உருவாக்கப்படுகின்றன. ஆனால் தரத்தில் மேம்பாடு அடையாமல் உலகத்துக்கான ஜூவல்லராக இந்தியா மாறமுடியாது.

வெளிநாட்டு சந்தைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் கடுமையான தர நிர்ணயம் தேவைப்படுகிறது. தவிர் 10 கிராம் தங்கம் வாங்குவதற்கு இந்தியர்கள் சுமார் 50,000 ரூபாய் செலவு செய்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவதும் அவசியம். மேலும் ஹால்மார்க் கட்டாயம் ஆக்குவதால் வேலைவாய்ப்புகள் உருவாகும். தவிர, தங்கம் ஏற்றுமதியில் அடுத்த கட்டத்தை இந்தியா அடையும்" என தெரிவித்தார்.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com