நடுத்தர வர்க்கத்தினர் வாங்கிக் குவிக்கும் தங்கம்; என்ன காரணம்? - விரிவான அலசல்

நடுத்தர வர்க்கத்தினர் வாங்கிக் குவிக்கும் தங்கம்; என்ன காரணம்? - விரிவான அலசல்

நடுத்தர வர்க்கத்தினர் வாங்கிக் குவிக்கும் தங்கம்; என்ன காரணம்? - விரிவான அலசல்

தங்கத்தின் மீது ஆசைக் கொள்ளாத மனிதர்களை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதே பொதுவாக நிலவும் கருத்து. அந்தளவுக்கு காதணி, மஞ்சள் நீராட்டு, திருமணம், வரவேற்பு, வளைகாப்பு என்று எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும், மனிதனின் பிறப்பு முதல் சமூக அந்தஸ்தாக மாறிப்போனதுதான் இந்த தங்கம். இந்நிலையில் நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக தங்கம் வாங்கி குவிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த தொகுப்பை பார்க்கலாம்.

இந்திய தங்க கொள்கை மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்திருக்கிறது. இந்த ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபர் வருவாய் அடிப்படையில், விற்பனையான தங்க நகைகள் விற்பனை நிலவரம் ஆராயப்பட்டது. இதில் மொத்தம் விற்பனையான தங்கத்தில் 21 டன்னை ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் வருவாய் உள்ளவர்கள் வாங்கியுள்ளனர்.

இதன் மதிப்பு 11 ஆயிரத்து 366 கோடி ரூபாய் ஆகும். ஒன்று முதல் 2 லட்சம் ரூபாய் வருவாய் உள்ளவர்கள் 28 ஆயிரத்து 968 கோடி ரூபாய் மதிப்புக்கு 58 டன் தங்கம் வாங்கியுள்ளனர். 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளோர் 39 ஆயிரத்து 447 கோடி ரூபாய் மதிப்புள்ள 78 டன் தங்கம் வாங்கியுள்ளனர். 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளோர் 59 டன் தங்கம் வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு 29 ஆயிரத்து 623 கோடி ரூபாய் ஆகும். 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வருவாய் பிரிவினர் 43 டன் தங்கத்தை 21 ஆயிரத்து 681 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர்.

20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளோர் 4 ஆயிரத்து 242 கோடி ரூபாய் மதிப்பில் 9 டன் தங்கம் வாங்கியுள்ளனர். நடுத்தர வருவாய் பிரிவினரே அதிகளவில் தங்கம் வாங்குவது இப்புள்ளி விவரங்களில் உறுதியாவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தனிநபர் தங்க நுகர்வு என வரும்போது 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வருமானம் உள்ளவர்களே முதலிடத்தில் உள்ளனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

திருமணத்திற்காகவே தங்கம் வாங்குவதாக ஆய்வில் பங்கேற்றோரில் 43 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். இமயமலையை தொடும் அளவிற்கு தங்கம் விலை ஏறிக்கொண்டிருந்தாலும், தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த ஆய்வு கூறுகின்றது. மேலும், தங்கத்தின் வகைகள் என்ன? அதன் தரம், நிறம் குறித்தும், முதலீடு செய்யும் வழிமுறைகள் குறித்தும் காணலாம்.

தங்கத்தை அதன் தூய்மை, நிறம் , தரம் ஆகியவற்றை கொண்டு வகைப்படுத்த முடியும். தூய்மையை அளவிட அது எத்தனை காரட் எனும் அலகு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக 24 காரட், 22 காரட் மற்றும் 18 காரட் தங்கம் மக்களால் விரும்பி வாங்கப்படுகிறது. தூய்மை அலகு கொண்டு தங்கத்தை அளவிடும் போது தங்கத்தில் பிற உலோகங்கள் கலப்பை பொறுத்து அதன் காரட் அளவு மாறுகிறது. அதன்படி,

24 காரட் என்பது 100% தங்கம் அல்லது சுத்தத் தங்கம்

22 காரட் என்பது 91.7 % தங்கம்

18 காரட் என்பது 75.0 % தங்கம்

14 காரட் என்பது 58.3 % தங்கம்

12 காரட் என்பது 50.0 % தங்கம்

10 காரட் என்பது 41.7 % தங்கம் இருப்பதை உறுதி செய்கிறது.

அடுத்ததாக, தங்கத்தை அதன் நிறத்தை கொண்டு வகைப்படுத்த முடியும். சுத்த தங்கம், தங்கத்திற்கான பொன் நிறத்தில் இருக்கும். தங்கத்தோடு உலோகக் கலைவை அளவை மாற்றுவதன் மூலம் தங்கத்தை பிற நிறங்களுக்கு மாற்றலாம். தங்கத்துடன் தாமிரம் சேர்க்கப்பட்டு இளஞ்சிவப்பு தங்கம் தயாரிக்கப்படுகிறது. இதேபோல துத்தநாகம் சேர்க்கப்பட்டு பச்சைதங்கமும், நிக்கல், பலாடியம் மற்றும் வெள்ளி போன்றவை சேர்க்கப்பட்டு வெள்ளை நிற தங்கம் தயாரிக்கப்படுகின்றன. இவைதவிர ஊதா மற்றும் கருப்பு போன்ற நிறங்களிலும் தங்கம் தயாரிக்கப்படுகிறது.

மூன்றாவதாக தங்கத்தை அதன் தரத்தை கொண்டு வகைப்படுத்தலாம். ஹால்மார்க் தர சான்றிதழ்கள் இந்தியாவில் வழங்கப்படுகின்றன. ஹால்மார்க் தரசான்றை பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் வழங்குகிறது. இது சோதனைக்கு பிறகு தங்கத்தின் சர்வதேச தரத்தை உறுதி செய்கிறது. அதாவது பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை: தங்கத்தின் தூய்மை பிஐஎஸ்-ன் உரிமம் பெற்ற லேப் ஒன்றில் சரி பார்க்கப்பட்டிருப்பத்தை குறிக்கிறது. உடன் 916, 750, 585 எனும் எண் குறியீடுகள் அதன் உலோக கலப்பு விகிதத்தை குறிக்கின்றன.

இவ்வாறு பல வகைப்படுத்தப்படும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர், தங்கத்தை ஆபரணங்களாகவோ, தங்க நாணயங்கள், தங்க கட்டிகளாகவோ வாங்கி வைக்கலாம். மேலும், அதேபோல, தங்கப் பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் , தங்க நிதி, தங்க முதலீட்டுப் பத்திரம் போன்ற பல வடிவங்களில் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க முதலீட்டுப் பத்திரங்கள் அரசு தரப்பிலிருந்து விற்பனை செய்யப்படும்.

தங்க நகைகளை நேரில் வாங்கலாம், ஆன்லைன் மூலமாக பத்திரம் வாங்கி முதலீடு செய்யலாம். கோல்டு ஃபண்ட் திட்டங்கள் மூலமும் தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க ஆபரணங்களை விரும்பும் மக்களிடம், ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய்க்கு தங்கம் வாங்குவீர்கள் என்பது குறித்த கருத்துக்களை நியூஸ் 360 டிகிரி வீடியோவில் காண்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com