’பணிபாதுகாப்பு உத்தரவாதம்’ - தொழிற்சங்க கோரிக்கைக்கு ஃபோர்ட் நிர்வாகம் மீண்டும் மறுப்பு
ஃபோர்ட் நிர்வாகத்துடன் நடைபெற்ற அவசர பேச்சுவார்த்தையிலும், தொழிற்சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்க ஃபோர்ட் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் 2,700 பேர் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஃபோர்ட் நிறுவனத்தின் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில், நிரந்தர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஃபோர்ட் நிர்வாகத்திடம் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் முக்கிய கோரிக்கையை ஏற்க ஃபோர்ட் நிர்வாகம் மறுத்தது. இதனால் பணி பாதுகாப்பு தொடர்பாக அரசிடம் கோரிக்கையையும், மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்த ஃபோர்ட் தொழிலாளர்கள் திட்டமிட்டனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் மறைமலை நகர் ஃபோர்ட் தொழிற்சாலையில் எக்கோ ஸ்பாட் கார் உற்பத்தி பணிகள் தொடங்கியது.
உற்பத்தி பணிகளில் கடந்த இரண்டு நாட்களாக நிரந்தர தொழிலாளர்கள் 2,700 பேர் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற அவசர பேச்சுவார்த்தையில் ஃபோர்ட் இந்தியாவின் சென்னை தொழிற்சாலையின் அதிகாரிகள் ஆண்ட்ரியா, ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் தொழிற்சங்கம் சார்பில் 5 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அப்போது, ‘பணி பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை ஃபோர்ட் நிறுவனம் வழங்க வேண்டும்’ என்கிற தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு மீண்டும் ஃபோர்ட் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து நிரந்தர தொழிலாளர்கள் 2,700 பேர் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மதியம், இரவு உணவுகளை உட்கொள்ளாமல் கார் உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை காட்டுவதாக தொழிற்சங்கம் தரப்பில் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட எக்கோ ஸ்போட் வகை கார்கள் ஏற்கெனவே ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், அடுத்த வருடம் மத்தியில் வரை மறைமலை நகர் தொழிற்சாலையில் கார் உற்பத்தி தொடரும் என ஃபோர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தொழிலாளர்கள் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும், உற்பத்தி தொடர்ந்து நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என ஃபோர்ட் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பால வெற்றிவேல்