PT Web Explainer: இ.எம்.ஐ சலுகை... ஒதுக்கியது ரூ.6,500 கோடி; கிடைப்பது சில நூறுதான். ஏன்?

PT Web Explainer: இ.எம்.ஐ சலுகை... ஒதுக்கியது ரூ.6,500 கோடி; கிடைப்பது சில நூறுதான். ஏன்?
PT Web Explainer: இ.எம்.ஐ சலுகை... ஒதுக்கியது ரூ.6,500 கோடி; கிடைப்பது சில நூறுதான். ஏன்?

தற்போதைய சூழலில் தீபாவளிக்கு பலருக்கும் போனஸ் எதுவும் கிடைக்காது. கடனுக்கான வட்டி மீதான வட்டியை வங்கிகள் திருப்பி தரும். அந்தத் தொகையை வைத்து தீபாவளி செலவுகளை பார்த்துக்கொள்ளலாம் என பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், நடுத்தர குடும்பத்துக்கு இதுவும் ஏமாற்றமாகவே முடிந்திருக்கிறது.

முதலாவது, இந்தத் தொகையை நமக்கு திருப்பி கொடுக்கமாட்டார்கள். வீட்டுக்கடன் என்னும் பட்சத்தில் அசல் தொகையில் சேர்த்துவிடுவார்கள். இரண்டாவதாக, இந்தத் தொகை ஒன்றும் அவ்வளவு பெரிய தொகையும் கிடையாது. சில நூறுகளில் இருந்து சில ஆயிரம் வரை மட்டுமே கிடைத்தது.

எதற்காக இந்தத் தொகை?

கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால், பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வங்கியில் வாங்கிய கடன் அச்சுறுத்தவே மூன்று மாதங்களுக்கு கடன் தொகையை செலுத்த வேண்டாம் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மேலும் மூன்று மாதங்களுக்கு கடந்த சலுகை அறிவிக்கப்பட்டது. அதாவது, மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்துக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. 2 கோடி ரூபாய் வரையிலான தொகைக்கு இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டது. வீட்டுக்கடன், கிரெடிட் கார்ட், பர்சனல் லோன் என அனைத்து வகையான கடனுக்கும் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டது.

ஒருவேளை கடன் தொகையை செலுத்த முடிந்தால், சரியாக செலுத்திவிட வேண்டும் என்பதே பெரும்பாலான நிதி ஆலோசகர்களின் கருத்தாக இருந்தது. அதனால், சிலர் சரியான நேரத்தில் கடன் தவணையை செலுத்திவந்தனர். இந்த நிலையில் வேறு ஒரு சிக்கல் உருவானது.

கடனை செலுத்தாதவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டது. இந்தச் சூழலில் கடன் தவணையை சரியாக செலுத்தியவர்களுக்கு என்ன என்னும் கேள்வி எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் மீது மத்திய நிதி அமைச்சகம் பதில் அளித்தது. அதில் வட்டி மீதான வட்டியை மத்திய அரசு தருவதாக வாக்குறுதி அளித்தது.

பிப்ரவரி 29-ம் தேதிக்கு முன்பாக வாங்கப்பட்ட கடனுக்கு சரியாக தவணை செலுத்திவருபவர்களுக்கு மட்டுமே அரசின் இந்தச் சலுகை பொருந்தும். இதில் கடன் தவணை செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் என அனைவருக்கும் இந்தச் சலுகை பொருந்தும். கடன் தவணையை ஆறு மாதங்களுக்கு கட்டவில்லை எனில், அந்த வட்டியை வங்கிகள் விதிக்கும். அந்தத் தொகையை அரசு வழங்குவதால் கடன் வாங்கியவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

ஒருவேளை இந்த ஆறு மாதங்களும் சரியாக தவணையை செலுத்தி இருக்கும்பட்சத்தில் வங்கிகள் சம்பந்தப்பட்ட நபரின் கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். இதனால், அசல் தொகை குறையும். இதற்காக மொத்தம் 6,500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது.

இந்தியாவில் மொத்தம் ரூ.100 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளால் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதில், அரசின் தகுதியை ரூ.40 லட்சம் கோடி கடன்கள் மட்டுமே எட்டும். 8 சதவீத வட்டி என வைத்துக்கொண்டால் கூட ரூ.6,500 கோடி செலவாகும் என அரசு தெரிவித்திருக்கிறது.

யாருக்கு கிடைக்கும்?

பிப்ரவரி 29-ம் தேதிக்கு முன்னதாக அந்தக் கடன் கணக்கு வாராக்கடனாக மாறி இருக்கக் கூடாது. அதேபோல அரசின் சலுகையை பெறுவதற்கு கடன் வாங்கியவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட வங்கிகளே வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கும். கடந்த ஐந்தாம் தேதியே இதற்கான பணிகள் முடிவடைந்துவிட்டன. பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு இதுகுறித்த தகவல் வரும். இல்லையெனில் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் விசாரிப்பது நல்லது.

ஏன் குறைந்த தொகை?

பலரும் வங்கி அல்லது வீட்டுக்கடன் நிறுவனத்தில் விசாரித்ததில் சில நூறு ரூபாய்கள் மட்டுமே கணக்கில் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருப்பீர்கள். காரணம் இதுதான்: நீங்கள் ஒரு கோடி ரூபாய் கூட கடன் வாங்கி இருக்கலாம். ஆனால், பிப்ரவரி மாத இறுதியில் செலுத்தப்பட வேண்டிய அசல் தொகைக்குதான் இந்தச் சலுகை கிடைக்கும். ஒருவேளை 50 லட்சம் அசல் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்தத் தொகைக்கு ஆறு மாத கூட்டு வட்டிக்கும் சாதாரண வட்டிக்கும் இடையேயான வித்தியாச தொகை நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஹெச்டிஎப்சி வங்கியின் துணை நிறுவனமான ஹெச்டிபி பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தின் இணையதளத்தின் படி 10 லட்ச ரூபாய் மீதம் செலுத்த வேண்டிய பட்சத்தில் 8 சதவீதம் என்றால் 684 ரூபாய் வரவு வைக்கப்படும். ஒருவேளை 12 சதவீதமாக இருந்தால் 1,545 ரூபாய் வரவு வைக்கப்படும்.

இரு வகையிலான வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வழங்குவதால் மட்டுமே தொகை குறைவாக இருக்கிறது.

ஒரு லட்ச ரூபாய் கடன் தொகை இருந்தால் 8 சதவீத வட்டி எனில் 68 ரூபாய் கிடைக்கும். ஒருவேளை 14 சதவீத வட்டியாக இருக்கும்பட்சத்தில் லட்ச ரூபாய்க்கு 210 ரூபாய் கிடைக்கும். பிப்ரவரி மாத இறுதியில் உள்ள வட்டி விகிதமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். (அதன் பிறகு கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டது).

இந்தத் தொகை கடன் வாங்கியவர்களுக்கு வருமானமாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவரின் வரி வரம்புக்கு ஏற்ப வரி செலுத்தியாக வேண்டும். ஆனால், இந்தத் கருணை தொகைக்கு டிடீஎஸ் கிடையாது.

வாடிக்கையாளர்களுக்கு செலுத்துவதால் வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ பாதிக்கப்படப்போவதில்லை. வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் மத்திய அரசு இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கிவிடும்.

இரு வகையிலான வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வழங்குவதால் மட்டுமே தொகை குறைவாக இருக்கிறது. நாம் கேட்காவிட்டாலும் இந்தத் தொகை கிடைக்கும் என்றாலும் இதனை உறுதி செய்துகொள்வது அவசியம்.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com