"30 வயசுல வேலையிலிருந்து ஓய்வு பெற ஆசையா? FIRE Retirement பத்தி தெரிஞ்சுக்கோங்க!"

"30 வயசுல வேலையிலிருந்து ஓய்வு பெற ஆசையா? FIRE Retirement பத்தி தெரிஞ்சுக்கோங்க!"
"30 வயசுல வேலையிலிருந்து ஓய்வு பெற ஆசையா? FIRE Retirement பத்தி தெரிஞ்சுக்கோங்க!"

“30 வயதிலேயே வேலையிலிருந்து ஓய்வு பெற நினைப்பவர்கள் FIRE Retirement பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல சேமிக்கவும், முக்கியமாக தங்களின் செலவுகளை குறைத்துக்கொள்ளவும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இத்துடன் சேமிப்பை எப்படி செய்வது என்றும் அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்” என நமது `வரவு பத்தணா செலவு எட்டணா’ நிகழ்ச்சியில் நம் கேள்விகளுக்கு பதிலளித்த நிதி ஆலோசகர் வ.நாகப்பன் தெரிவித்தார். அவருடனான நம் நேர்காணலின் முழு விவரம், கேள்வி பதிலாக இங்கே:

ரிட்டயர்மெண்ட் பற்றி உங்கள் கருத்து என்ன?

ரிட்டயர்மெண்ட் என்பது குறிப்பிட்ட வயது வந்தவுடன், வேலையிலிருந்து நின்றுவிட்டு ஓய்வெடுத்தல் என்று பலர் நினைக்கின்றனர். அது ரிட்டயர்மெண்ட் அல்ல. நமக்கு பிடித்த வேலையை செய்து முடித்தப்பின், `போதும்’ என்று எப்போது தோன்றுகிறதோ, அப்போது ஓய்வெடுக்க முடிவெடுப்பதுதான் ரிட்டயர்மெண்ட். இந்தியாவை பொறுத்தவரையில் 58 வயது நிறைந்தவுடன் ஒருவர் ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்படுகிறார் என்றே சொல்லலாம். உண்மையில் நமக்கு பிடித்த வேலை, இப்படியான ஓய்வை நமக்கு தராது.

ரிட்டயர்மெண்ட் பற்றி பேசும்போது FIRE என்றொரு கான்செப்ட் பற்றி பேசப்படுகிறது. FIRE என்றால் என்ன?

FIRE என்றால், Financially Independent to Retire Early. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிபட்ட ஒரு கருத்தாக்கம் பேசப்படுகிறது. வேலையில் நிச்சயமற்ற தன்மை, வேகமாக மாறக்கூடிய தொழில்நுட்பம், நிரந்தரமற்ற வேலை ஆகியவற்றினால் சீக்கிரம் ஓய்வை ஒருவர் பெற விரும்பும் நிலைமை நிலவி வருகிறது. கடந்த தலைமுறையில், 20 அல்லது 25 வயது வரை இளைஞர்கள் படிப்பார்கள். பிறகு 30 வருடங்கள் வேலை பார்ப்பார்கள். ஆனால் இன்றைய கால கட்டங்களில் ஒருவர் 40 வயது வரை படிக்க வேண்டியிருக்கிறது. தொழில்நுட்பம் மாறிக்கொண்டே வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமும் அப்டேட்டாக இருக்கவேண்டியுள்ளது.

வேலையிலும் எத்தனை நாட்கள் நாம் இப்படி ஓடவேண்டி இருக்கும் என தெரியாது. இப்படி செய்வதால், மன உளைச்சல் அதிகரிக்கிறது. இத்தகைய ஓட்டத்திற்கு தயாராக இல்லாதவர்களை, நிறுவனம் வெளியேற்றிவிடுகிறது. அதே போல் அதிக வருமானம் கிடைக்கும் பொழுது அதிக செலவுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள் மக்கள். ஆகையால் சேமிப்பும் இருப்பதில்லை. திடீரென்று வேலை இழப்பு என்ற பயமும் நம்மை தொற்றிக்கொள்வதால், நாம் நினைத்த வேலையை நம்மால் செய்ய இயலாமல் போகிறது. இப்படியான சூழலில், Fire கருத்தாக்கம் உதவும். அதாவது Financial independence retire early. இதன்மூலம் நமக்கு பிடித்த வேலையை செய்ய ஆரம்பித்து, சீக்கிரம் சம்பாதித்து, விரைந்து ஓய்வு பெற நினைக்கின்றனர் மக்கள்.

இந்த நிலையை எட்டவேண்டும் என்றால் எந்த வேலையை செய்யலாம்? எதை செய்யக்கூடாது?

இந்த வேலை அந்த வேலை என்றில்லை. எந்த வேலையாக இருந்தாலும், அதில் நம் திறமையை சரியாக காட்டவேண்டும். அதன் மூலம் நிறைய சம்பாதிக்க வேண்டும். முக்கியமாக செலவை கட்டுப்படுத்த வேண்டும்; சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதிகரித்த சேமிப்பை முதலீட்டில் போடவேண்டும். எந்த அளவு செலவை குறைக்கின்றோமோ அந்த அளவு, நமக்கு சேமிப்பு அதிகரிக்கும். இப்படி செய்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்களாக இருக்கிறார்கள்.

இதில் உள்ள சவால்கள் என்னென்ன?

இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பதிலேயோ திறமையை வளர்த்துக் கொள்வதிலேயோ எந்த பிரச்னையும் இருப்பதில்லை. பிரச்னை, சேமிப்பில் மற்றும் முதலீட்டில் தான் வருகிறது. எப்பொழுது credit card கடன் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதோ, அப்போதே மக்கள் மத்தியில் சேமிப்பானது குறையத்தொடங்கிவிட்டது. இத்திட்டம் முற்றிலும் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் பொருளாதாரத்தில் குறைவாக இருக்கும் சமூகத்தை இவர்களால் சுலபமாக வளைக்கமுடியும்.

இத்திட்டத்தால் அமெரிக்காவில் தனி நபர்களுக்கு கடன் சுமை அதிகமாகி உள்ளது. அதேநேரம் இந்தியாவில் தனி நபர் கடனை விட அரசாங்கம் தான் அதிக அளவு கடன் சுமையில் இருக்கிறது. ஆனால் இப்போது இங்கும் இந்நிலை மாறத்துவங்கி உள்ளது. எப்படி என்றால், நமக்கு தேவைப்படாத பொருட்களை நாம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். உதாரணத்துக்கு, பண்டிகை மற்றும் விழாக்கால ஆஃபர்களில் குறைந்த விலையில் கிடைக்கும் நமக்கு தேவைப்படாத பொருட்களை வாங்குகிறோம். இது உண்மையில் கவலை அளிக்கக்கூடிய விஷயம். ஏனெனில் ஆடம்பர பொருட்களில் தான் நம் மரியாதை இருக்கிறது என்ற நினைத்து, credit card கொண்டு அப்பொருட்களை வாங்கும் மக்களுக்கு, சேமிப்பிற்கு பதில் கடன் சுமை அதிகரிக்கிறது. ஆகவே இப்பழக்கத்தை மக்கள் விடவேண்டும். இது, மிகப்பெரய சவால். 

அடுத்த சவால், சேமிப்பை எப்படி செய்கிறோம் என்பதில் உள்ளது. ஒரு சாரார் தன் சேமிப்பு முழுவதையும் பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார்கள். மற்றொரு சாரார், பங்கு சந்தை பக்கமே போகாமல் நிரந்தர வருமானத்தில் முதலீடு செய்பவர்களாக உள்ளனர். இப்படி ஏதோவொன்று என்றில்லாமல், இரண்டிலும் முதலீடு செய்வது நல்லது. அதுவே நல்ல முதலீட்டாளருக்கு அழகு. அதேபோல, அவசரத்திற்கு கூட அப்பணத்தை எடுக்கக்கூடாது. இதுவும் மிகப்பெரிய சவால்தான்!

இத்தைகய சவால்களை அமெரிக்கா போன்ற நாடுகள், சமாளித்துவிடுகிறதா?

அவர்கள் இப்பொழுது மாற ஆரம்பித்துள்ளனர். இந்தியாவை பொருத்த வரையில் இம்மாற்றத்தை சுலபமாக மக்களிடையே கொண்டு வர முடியும்.

எவ்வளவு தொகை இருந்தால் இந்த FIRE கருத்தாக்கத்தின் படி சீக்கிரமாக ரிட்டயராக முடியும்?

இது நபருக்கு நபர், அவரவர் செலவுக்கு தகுந்தமாதிரி மாறுபடும். ஒவ்வொரு ஆண்டும் செலவிடப்படும் தொகையில் குறைந்தது 20 % கைவசம் இருந்தால் ஒருவர் ரிட்டயர் ஆகிவிடலாம்,

இன்றைய இளைஞர்களின் எண்ணமானது, “இன்று சம்பாதிப்பதை இன்றே செலவு செய்துவிடவேண்டும்" என்பது தான். இது சரியான போக்கா?

இன்றைய இளைஞர்களுக்கு சேமிப்பில் ஆர்வம் இருந்தாலும் அதை செயல்படுத்துவதில் பிரச்சனை எழுகிறது. இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இது எப்போதும் கிடைத்துக்கொண்டிருக்கும் என நினைத்து நிறைய செலவு செய்ய ஆரம்பித்து வருகின்றனர். ஒருவர் ரூ. 50,000 செலவு செய்து வரும்பொழுது, அவர் கைக்கு ஏதாவதொரு மாதத்தில் ரூ. 30,000 கிடைத்தால் அவர்களால் செலவை கட்டுப்படுத்த இயலாமல் போகிறது. இப்படியானவர்கள் சேமிப்பு தொடர்பான விஷயங்களில் ஆலோசனைய பெற்று, சேமிப்பில் சிறந்து விளங்கவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com