ஜியோவில் 43,610 கோடி முதலீடு செய்யும் ஃபேஸ்புக்.. - காரணம் என்ன ?

ஜியோவில் 43,610 கோடி முதலீடு செய்யும் ஃபேஸ்புக்.. - காரணம் என்ன ?
ஜியோவில் 43,610 கோடி முதலீடு செய்யும் ஃபேஸ்புக்.. - காரணம் என்ன ?

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக், இந்தியாவின் ஜியோ நிறுவனத்தில் முதலீடுகளை செய்துள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அத்துடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்தது. போன் பே, பேடிஎம், கூகுள் பே, பீம் என பல்வேறு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆப்கள்(Apps) இந்தியாவில் அதிகரித்தன.

சினிமா டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகள், மின்கட்டணம், பணம் கொடுக்கல் வாங்கள், பெட்ரோல் போடுவதற்கு, ஷாப்பிங் செய்வதற்கு, கல்விக் கட்டணங்களுக்கு என அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் பெருகியது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ஆப்களும் பல்வேறு சலுகைகளை வாரி இரைத்தன. இதையெல்லாம் கண்ட ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் தாங்களும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் கால் பதிக்க வேண்டும் என நினைத்தது. இதற்காக தங்கள் செயலியான வாட்ஸ் அப்பை அது பயன்படுத்த முடிவு செய்தது. அதன்படி, வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் அனுமதியை மத்திய அரசிடம் அந்நிறுவனம் பெற்றது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பணப் பரிமாற்றம் தடை செய்யப்பெறவில்லை. காரணம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஆப்கள் மூலம் பணப் பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு காலத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பல மடங்கு அதிகரித்திருப்பதை பல்வேறு ஆய்வறிக்கைகளும் குறிப்பிட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் நம்பகத் தன்மைகொண்ட ஒரு நிறுவனத்துடன் கைகோர்க்க முடிவு செய்தது. அதன்படி, இந்தியாவில் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் அம்பானியின் ஜியோவை ஃபேஸ்புக் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் 400 மில்லியன், அதாவது 80% ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். அத்துடன் பல கோடி பேர் ஜியோவையும் பயன்படுத்துகின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் மொத்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளையும் கவர ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக ஜியோ நிறுவனத்தில் 5.7 பில்லியன் டாலரை (43,610.98 கோடி) முதலீடு செய்திருக்கிறது ஃபேஸ்புக்.

உலக அளவில் 63.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பும் (ஃபேஸ்புக்), 47.5 மில்லியன் சொத்து மதிப்பும் (ரிலையன்ஸ்) கொண்ட இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை திட்டத்தின் மூலம் இந்தியாவில் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் புரட்சி ஏற்படலாம் என கருதப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவில் சிம் நிறுவனங்கள் அதிகபட்ச கட்டணங்களை வசூலித்துக்கொண்டிருந்த போது, திடீர் புரட்சி மூலம் டேட்டாக்களையும், போன் அழைப்புகளையும் மிகக் குறைவான விலைக்கு கிடைக்கச் செய்தது ஜியோ. அந்த வகையில் ஃபேஸ்புக்-ஜியோ இணையும் போது மேலும் சில டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை புரட்சிகள் இந்தியாவில் ஏற்படலாம் எனப்படுகிறது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மட்டுமின்றி ஆன்லைன் மூலம் அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருட்களை விற்கும் முறையையும் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோ மார்ட் எனும் ஆப் மூலம் உணவுப் பொருள் விநியோகத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

ஜியோவுடனான கைகோர்ப்பு குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் கூறியுள்ள தகவலில், “ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இது பொருளாதார முதலீடுகளை மேம்படுத்துவதாகவும். நாங்கள் இணைந்து இந்தியாவில் பெரும் வர்த்தக பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பெரும் பயன்பாட்டாளர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. அத்துடன் இங்கு ஏராளமான தொழில் முனைவோர்கள் உள்ளனர். அவர்களைப் போன்ற கோடிக்கணக்கானோருக்கு இடையே தகவல் பரிமாற்றத்தில் ஜியோ பெரும் பங்கு வகிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி கூறுகையில், “எனது சக இந்தியர்களே உங்களுக்காக ஒரு செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன். நம் அனைவரின் சார்பாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு ஃபேஸ்புக் நிறுவனத்தை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டுறவின் மூலம் இந்தியாவில் மார்க்வுடன் சேர்ந்து நான் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளவுள்ளேன்” என தெரிவித்திருக்கிறார்.

டிஜிட்டல் பரிவர்த்தனை, டிஜிட்டல் மார்ட் (உணவு உள்ளிட்ட வீட்டு உபயோகப் பயன்பாட்டு பொருட்கள்) உட்பட 3 வித வியாபாரங்களை இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளன. இதன்மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நிறுவனங்களும் இணைந்து தொடங்கும் இந்த வியாபாரத்தின் மதிப்பு 2023ஆம் ஆண்டில் 135.2 பில்லியனாக இருக்கும் என சில ஆய்வறிக்கைகள் கணித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com