பட்ஜெட் 2021: "GST-யை எளிதாக்குக!"- சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் எதிர்பார்ப்புகள்

பட்ஜெட் 2021: "GST-யை எளிதாக்குக!"- சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் எதிர்பார்ப்புகள்
பட்ஜெட் 2021: "GST-யை எளிதாக்குக!"- சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் எதிர்பார்ப்புகள்

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என கூறப்படுவது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை. இந்த துறையினரின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன? - இதோ ஒரு பார்வை...

இந்திய பொருளாதாரத்தில் விவசாயம், ஜவுளித் துறைக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய துறை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை. இந்த பட்ஜெட்டில் பல்வேறு கோரிக்கைகளை இத்துறையினர் முன் வைத்துள்ளனர்.

குறிப்பாக டான்ஸ்டியா எனப்படும் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்துள்ளது.

குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான வரியை முறையே 15 சதவிகிதமாகவும் 20 சதவிகிதமாகவும் குறைக்க வேண்டும், அதிகம் பேருக்கு வேலை தரும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட ஊக்கங்கள் தருதல், பெண் தொழில் முனைவோருக்கு வரிச்சலுகை, சிறு, குறு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி சலுகையை அதிகரிப்பது, கடன் வட்டி உச்ச வரம்பை 8 சதவிகிதமாக நிர்ணயித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கம் தர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும் இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான விலையை குறைக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கமான டான்ஸ்டியாவின் பொதுச் செயலாளர் இந்துநாதன்.

சிறு, குறுந்தொழில்கள் குறித்த வங்கிகளின் கண்ணோட்டம் மாற வேண்டும் என கூறுகிறார், மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கமான மடீட்சியாவின் தலைவர் முருகானந்தம். ஜிஎஸ்டி வரி நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் எனவும் இவர் கூறுகிறார்.

சிறு, குறுந்தொழில் துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாரியம் அமைப்பது, 5 கோடி ரூபாய்க்கு கீழ் கடன் வாங்கிய நிறுவனங்களுக்கு மட்டுமானது சர்பாசி சட்டத்திலிருந்து உடனடியாக விலக்களிப்பது ஆகிய கோரிக்கைகள் அரசிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களில் குறைந்தது 50 சதவீதத்தை சிறு தொழில் துறையினரிடம் இருந்து கொள்முதல் செய்வதை கட்டாயமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com