சார்ஜிங் முதல் பராமரிப்பு வரை: எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?

சார்ஜிங் முதல் பராமரிப்பு வரை: எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?
சார்ஜிங் முதல் பராமரிப்பு வரை: எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?
Published on

இந்தியா உட்பட உலகம் முழுவதும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் பெட்ரோல் விலைக்கு மத்தியில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்களின் கவனத்தை பெற்றுள்ளன. 

அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அரசு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கென மானியங்களை அறிவித்திருப்பதும் மக்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. உலக நாடுகள் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டுக்கு மாறி வருகின்றன. அதில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இந்தியாவுக்கு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் சில பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருந்தாலும் மக்களிடையே இப்போது அதிக கவனம் பெற்று வருகிறது. அதற்கான காரணத்தை நாம் கட்டுரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். 

ஹீரோ, பஜாஜ், டிவிஎஸ் என இந்திய நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. அதே போல எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஓலா மாதிரியான நிறுவனங்களும் இந்தியாவை டார்கெட் செய்து வருகின்றன. 

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சாதகம் என்ன? பாதகம் என்ன? என்பதை பார்ப்போம். 

விலை : பெட்ரோல் இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயர்வாக தான் உள்ளது. அதற்கு காரணம் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்படும் Lithium-Ion வகை பேட்டரி என சொல்லப்படுகிறது. விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் கிடைத்தாலும் அதன் தரம் கேள்விக் குறியாக உள்ளது. 

செலவு குறைவு : எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில் அதை இயக்குவதற்கான செலவு என்பது மிகவும் குறைவு. உதாரணமாக ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை  எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பயணிக்கும் வசதிகள் உள்ளன. இது பெட்ரோல் வாகனங்களை இயக்க பிடிக்கும் செலவை காட்டிலும் குறைவு. 

சார்ஜிங் : பெட்ரோல் வாகனங்களில் நொடி பொழுதில் பெட்ரோலை நிரப்பி இயக்கலாம். ஆனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்ய சில நிமிடங்கள் வரை பிடிக்கும். அதே போல இந்த வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான  சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதிகளவில் இல்லாததும் பாதகமே. இருந்தாலும் வரும் நாட்களில் இந்த சிக்கல் தீர்வு காணப்பட கூடிய ஒன்று. 

பராமரிப்பு செலவு : பெட்ரோல் ஸ்கூட்டருடன் ஒப்பிடும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பராமரிப்பு செலவு என்பது குறைவு தான். ஆயில் மாற்ற வேண்டிய தேவை, ரெகுலராக சர்வீஸ் செய்ய வேண்டிய தேவைகள் இதில் இல்லை. இருந்தாலும் இது எதிர்வரும் நாட்களில் பயன்பாட்டின் அடிப்படையில் மாற்றம் பெறலாம். அதே போல இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகளின் நீடித்த உழைப்பு தன்மை கேள்வியாக உள்ளது. சிலர் இந்த பேட்டரிகள் விலை உயர்வாக இருந்தாலும் அதன் பயன்பாடு சில காலம் தான் எனவும் சொல்கின்றனர். வாகன உற்பத்தி நிறுவனம் கொடுக்கின்ற உத்தரவாதம் இருக்கும் வரை பேட்டரி விஷயத்தில் சிக்கல் இருக்காது. 

சுற்றுச்சூழல்? : எலக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரையில் சுற்றுச்சூழலுக்கு எந்த சிக்கலும் இல்லை என சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் இந்த வாகனங்கள் புகை எதையும் வெளியிடுவதில்லை. அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் நிலக்கரி மூலமாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி மூலம் மின்சாரம் தயாராகும் போது சூழல் மாசு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. 

குறுகிய தொலைவு தூரம் மட்டுமே பயணிப்பது, பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இதனை பயன்படுத்த கொஞ்சம் சிரமமாக இருப்பது, மித (Slow) வேகமான இயக்கம் மாதிரியானவை எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கூடுதல் பாதகங்கள். 

மறுபக்கம் ஒலி மாசு குறைவாக உள்ளது, ஓட்டுநர் உரிமம் தேவையில்லாதது மாதிரியானவை இந்த வாகனத்தின் சாதகங்களாக உள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com