முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம்; குஜராத்திற்கு பின்னடைவு
முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 6-ஆவது இடத்திலிருந்து 2-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் குஜராத் முன்பை விட தற்போது பின்தங்கியுள்ளது.
இந்தியாவில் எந்தெந்த மாநிலங்கள் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறப்பாக விளங்குகிறது என்பது தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் என்சிஏஈஆர் (NCAER) வெளியிட்டுள்ளது. இதில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்ற மாநிலமாக டெல்லி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த முறை இரண்டாம் இடத்தில் இருந்த டெல்லி தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. தமிழகம் ஏற்கனவே இருந்த 6-வது இடத்திலிருந்து 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு 2-வது இடத்திற்கு வந்துள்ளது. அதேசமயம் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த குஜராத் இரண்டு இடங்கள் பின்தங்கி மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது.
இந்த பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் அதிகப்படியாக 11 இடங்கள் முன்னேற்றம் கண்டு 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் ஆந்திரப் பிரதேச மாநிலம் 3-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்த பட்டியலில் ஹரியானா 4-வது இடத்திலும், மகாராஷ்டிரா 5-வது இடத்திலும், கேரளா 6-வது இடத்திலும் உள்ளது. மாநிலத்தில் தொழில் செய்வதற்கான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வைத்து என்சிஏஈஆர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.