’சர்ச்சையான விளம்பரம்’ - பாஜக அமைச்சர் எச்சரிக்கையை அடுத்து நீக்கியது டாபர் நிறுவனம்!
இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்களில் ஒன்று டாபர் நிறுவனம். இந்நிறுவனம் அண்மையில் பெண்கள் இருவர் திருமண பந்தத்தில் இணைவது மாதிரியான விளம்பர படத்தை வெளியிட்டிருந்தது. அதில் பெண்கள் இருவர் ‘கர்வா சவுத்’ விரதத்தை கொண்டாடுவதை போல காட்சி அமைக்கப்பட்டிருந்து. அதற்கு மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்திருந்தார். சட்ட ரீதியிலான நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்திருந்தார் அவர்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நீக்கி உள்ளதாகவும், இதற்காக தாங்கள் மன்னிப்பு கோருவதாகவும் டாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. “சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அனைத்து தளங்களில் இருந்தும் நீக்கி வீட்டோம். அந்த விளம்பர படத்திற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் யாருடைய மனம் ஏதும் புண்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இதனை நாங்கள் வேண்டுமென்று செய்யவில்லை” என டாபர் சொல்லியுள்ளது.
முன்னதாக FabIndia, CEAT டயர்ஸ் மாதிரியான நிறுவனங்களின் விளம்பரங்கள் சர்ச்சையை எழுப்பி இருந்தன.
கர்வா சவுத்?
பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் பெண்கள் தங்களது கணவரின் நலனுக்காக இருக்கும் விரத முறை. நாள் முழுவதும் விரதம் இருந்து நிலவினை பார்த்த பின்பு கணவனை பார்ப்பது வழக்கம். இதற்கு உதாரணமாக தமிழ் திரை இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தில் இந்த விரதம் தொடர்பான காட்சி ஒன்று அமைந்திருக்கும். அதில் நாயகி, நாயகனை நிலவினை பார்த்த பிறகு பார்ப்பார்.

