கச்சா எண்ணெய் விவகாரம்: சவுதி அரேபியாவுக்கு 'செக்' வைக்கும் இந்தியா?

கச்சா எண்ணெய் விவகாரம்: சவுதி அரேபியாவுக்கு 'செக்' வைக்கும் இந்தியா?
கச்சா எண்ணெய் விவகாரம்: சவுதி அரேபியாவுக்கு 'செக்' வைக்கும் இந்தியா?

கச்சா எண்ணெயை சவுதி அரேபியாவிடம் இருந்து வாங்குவதற்கு பதில், வேறு நாடுகளில் இருந்து வாங்க முயற்சி செய்யுமாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் இதற்கு காரணம் என மத்திய அரசு கூறி வருகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியாவும் ஓபெக் அமைப்பில் உள்ள மற்ற எண்ணெய் வள நாடுகளும் செயற்கையாக குறைத்ததால் அதன் விலை உலக சந்தையில் உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அதன் விலையை குறைக்க வழிசெய்யுமாறு இந்தியா தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளை சவுதி அரேபியா ஆதிக்கம் செலுத்தும் ஓபெக் அமைப்பு ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து சவுதி அரேபியா உள்ளிட்ட ஓபெக் நாடுகளை தவிர்த்து வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யுமாறும், 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் கூட்டாக பேரம் பேசி விலை குறைவாக வாங்க நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகளவில் 3ஆவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக உள்ள நிலையில் தங்கள் இந்த முடிவு உலக எண்ணெய் சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என இந்தியா கருதுகிறது.

அமெரிக்கா, கயானா போன்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா ஏற்கெனவே அதிகரிக்கத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளிடம் வாங்காமல் தொலைவில் உள்ள நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கும்போது சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com