கொரோனா விளைவு: மூன்று படுக்கை அறை வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு!

கொரோனா விளைவு: மூன்று படுக்கை அறை வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு!
கொரோனா விளைவு: மூன்று படுக்கை அறை வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு!

கொரோனா பேரிடர் நீள்வதன் எதிரொலியாக, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த மக்களின் தேவையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமானதாக, வீட்டில் இருந்தே பணிபுரியும் சூழலால் பெரிய வீடுகளுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதுவரை அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழல் இருந்தது. இனி, வீட்டில் இருந்து வேலை என்பது தவிர்க்க முடியாத விஷயமாக மாறிவிட்டது. அலுவலகத்தில் நடந்த மாற்றம் ரியல் எஸ்டேட் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டிய சூழல் இருப்பதால் வீட்டில் ஓர் அறையை அலுவலகமாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் மூன்று படுக்கை அறை மற்றும் அதற்கும் மேலே படுக்கை அறை உள்ள வீடுகளுக்கான தேவை சந்தையில் உயர்ந்திருக்கிறது.

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) இதுபோன்ற பெரிய வீடுகளுக்கான தேவை உயர்ந்திருப்பதாக ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனமான 'புராப்ஈக்விட்டி' தெரிவித்திருக்கிறது. மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, புனே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய ஏழு பெரிய நகரங்களில் இதற்கான தேவை உயரந்திருக்கிறது.

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் இந்த ஏழு நகரங்களில் 58,000 வீடுகள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் 1.5 கோடி ரூபாய்க்கு அதிகமான வீடுகளின் விற்பனை 9 சதவீதமாக இருக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த நகரங்களில் 45,200 வீடுகள் விற்கப்பட்டன. இதில் ரூ.1.5 கோடிக்கு அதிகமான வீடுகளின் பங்கு 6 சதவீதம் மட்டுமெ. ஒட்டுமொத்தமாக 2020-ம் ஆண்டில் 1.38 லட்சம் வீடுகள் விற்பனையானது. இதிலும் ரூ.1.5 கோடிக்கும் மேலான விலையுள்ள வீடுகளின் பங்கு 6 சதவீதம்தான். ஆனால் நடப்பு ஆண்டில் மொத்த வீடுகளின் விற்பனையில் பெரிய அளவு வீடுகளின் விற்பனை உயரந்திருக்கிறது.

கொரோனாவுக்கு முன்பாக 2019-ம் ஆண்டிலும் மொத்த விற்பனையில் பெரியு வீடுகள் (ரூ.1.5 கோடிக்கும் மேலே) பங்கு சுமார் 7 சதவீதமாக மட்டுமே இருந்தது.

வீட்டில் இருந்து வேலை என்னும் புதிய சூழல் காரணமாக மக்களின் வீடு வாங்கும் முறையில் மாற்றம் நடந்திருப்பதாக பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. தவிர ரூபாய் மதிப்பு சரிந்திருப்பதால் வெளிநாடு வாழ் இந்தியர்களும் பெரிய அளவிலான வீடுகளில் கவனம் செலுத்துகிறார்கள் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com